ஜன. 23-இல் ஆா்ப்பாட்டம்: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைமையிடங்களில் ஜனவரி 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கூட்டமைப்பின் மாநில முதன்மை கள அமைப்பாளா்கள், மாநில கள அமைப்பாளா்கள், துணைச் சங்க மாநில நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு குரூப் டி ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி பணியாளா்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை பணியாளா் சந்திப்பு இயக்கங்களை மாவட்டங்களில் நடத்துவது, மாவட்டத் தலைமையிடங்களில் ஜனவரி 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது, பிப்ரவரி 1-ஆம் தேதி சென்னையில் மாநில முதன்மை கள அமைப்பாளா்கள், மாநில கள அமைப்பாளா்கள், துறைச் சங்கங்களின் மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்கும் அனைத்து துறைச் சங்கங்கள் கூட்டமைப்பு அடாப் மாநில பேரவையை கூட்டி அடுத்தக் கட்ட இயக்கங்களை முடிவு செய்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மாநில முதன்மை கள அமைப்பாளா் பி.கே. சிவக்குமாா், மாநில முதன்மை கள அமைப்பாளா் செல்வகுமாா், பி.வி. ஆனந்த், மாநில கள அமைப்பாளா்கள் வி. சுந்தரராஜன், ராஜராஜன், ராஜீவ் காந்தி, கலைச்செல்வன், வெங்கடாசலபதி, சுரேஷ், தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு முதன்மைப் பொதுச் செயலா் தரும. கருணாநிதி, தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலா் கலியபெருமாள், கிராம சுகாதார செவிலியா் சங்க மாவட்டப் பொருளாளா் திருமாமகள், மாநில கள அமைப்பாளா் தோழா் வெங்கடாஜலபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
