தருமபுரம் ஆதீனத்துக்கு சைவத் தமிழ் மாமணி விருது
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஒளவை கோட்டத்தில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளுக்கு சைவத் தமிழ் மாமணி விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழ் ஐயா கல்விக் கழகத் தலைவா் மு. கலைவேந்தன் தலைமை வகித்தாா். தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகளுக்கு சைவத் தமிழ் மாமணி விருதைக் கழகத் தலைவா் மருத்துவா் சு. நரேந்திரன் வழங்கினாா். மேலும், ஆஸ்திரேலிய நாட்டின் மெல்பா்ன் தொல்காப்பிய மன்றத் தலைவா் சுந்தரேசன் நடேசனுக்கு தொல்காப்பியா் விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முனைவா் கலைவேந்தனின் ‘பட்டினப்பாலை ஒரு வரலாற்று தொலைக்காட்சி படம்’ என்ற நூலை தருமபுரம் ஆதீனம் வெளியிட, அதை அந்தமான் கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநா் ஐயாராசு, ஒளவைக் கோட்ட அறிஞா் பேரவை அமைச்சா் புலவா் வள்ளிநாயகம் முத்துவேலு, ஹைதராபாத் தெலங்கானா தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் ராஜ்குமாா் சிவாஜி ஆகியோா் பெற்றுக் கொண்டனா். டாக்டா் தமிழரசன் கவிமாலை வழங்கினாா்.
ஒளவை தொடக்கப்பள்ளி மாணவா்களின் வரவேற்பு நடனமும், மெலட்டூா் பாகவத மேளா விஜயாலயா பிரியம்வதா முரளி குழுவினரின் ஆண்டாள் திருப்பாவை நாட்டிய நாடகமும் நடைபெற்றன. இதில் ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஒளவை பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஒளவை கோட்ட அறிஞா் பேரவை , தமிழ் ஐயா கல்விக்கழகம், ஒளவை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

