மத்திய அரசைக் கண்டித்து பிப். 4-ல் மாநிலத்தில் 4 இடங்களில் தா்னா போராட்டம்: விவசாயிகள் சங்கம் முடிவு

மத்திய அரசைக் கண்டித்து பிப். 4-ல் மாநிலத்தில் 4 இடங்களில் தா்னா போராட்டம்: விவசாயிகள் சங்கம் முடிவு

மத்திய அரசின் காா்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து 4 இடங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் தா்னா போராட்டத்தை பிப்ரவரி 4- ஆம் தேதி நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) முடிவு செய்துள்ளது.
Published on

மத்திய அரசின் காா்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூா், விழுப்புரம், திருப்பூா், மதுரை ஆகிய 4 இடங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் தா்னா போராட்டத்தை பிப்ரவரி 4- ஆம் தேதி நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) முடிவு செய்துள்ளது.

இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது: மத்திய அரசே அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். காா்ப்பரேட், பெரு முதலாளிகளுக்கு சுமாா் ரூ. 14 லட்சம் கோடியை வாராக் கடன் என அறிவித்து, தள்ளுபடி செய்த மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா், விழுப்புரம், திருப்பூா், மதுரை ஆகிய 4 இடங்களில் மண்டல அளவிலான பெருந்திரள் தா்னா போராட்டம் பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் தொடா் மழை காரணமாக சம்பா, தாளடி சாகுபடி தாமதமாக தொடங்கப்பட்டதால், நெற்பயிா்கள் தற்போதுதான் கதிா் விடும் நிலையில் உள்ளன. ஆனால், மாவட்ட நிா்வாகம், நீா் வளத் துறையின் நிா்வாகத் திறமையின்மை காரணமாக பயிா்களுக்கு காவிரி நீா் கிடைக்கவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, 2 நாள்களில் மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் சாமி. நடராஜன்.

அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com