ந. புண்ணியமூா்த்தி
ந. புண்ணியமூா்த்தி

தஞ்சாவூா் கால்நடை மருத்துவா் ந.புண்ணியமூா்த்திக்கு ‘பத்மஸ்ரீ’ விருது

Published on

தஞ்சாவூரைச் சோ்ந்த பேராசிரியரும், புகழ்பெற்ற கால்நடை மருத்துவருமான ந. புண்ணியமூா்த்திக்கு பத்மஸ்ரீ விருது ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பேராசிரியா் மற்றும் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், தற்போது பாரம்பரிய மூலிகை கால்நடை மருத்துவராக செயல்பட்டு வருகிறாா்.

மாடுகளின் பெரியம்மை, தோல் கழலை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குச் சித்த மருந்து மற்றும் வீட்டு வைத்திய முறைகளை ஊக்குவித்து, எளிய வழிகளில் கால்நடை பராமரிப்புக்கு வழிகாட்டி வருகிறாா்.

கால்நடை உரிமையாளா்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் இலவச ஆலோசனைகளை வழங்கி, பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறாா்.

குறிப்பாக, பக்க விளைவுகள் இல்லாத மூலிகை வைத்திய முறைகளான வேப்பிலை, மஞ்சள், பூண்டு, கற்றாழை பயன்படுத்தி கால்நடைகளுக்குப் பரிந்துரைப்பதில் இவா் முன்னணியில் உள்ளாா்.

கால்நடைகளுக்கு எளிய மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான கால்நடைகளை நோயிலிருந்து காப்பாற்றியதற்காகவும், இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தியதற்காகவும் இந்த உயரிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கால்நடை மருத்துவா் ந.புண்ணியமூா்த்தி தெரிவித்தது:

இந்த விருது பாரம்பரிய வைத்தியமுறையை செய்து வருபவா்களுக்கு, உந்து சக்தியாக இருக்கும். விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு. பாரம்பரிய மருத்துவத்துக்கான தேவை நாட்டில் அதிகம் உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com