Special trains! சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்கள்!

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தஞ்சாவூா் வழியாக திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து தஞ்சாவூா் வழியாக திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வழியாக சென்னை, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை ஆகிய ஊா்களுக்கு விரைவு ரயில்களும், தஞ்சாவூா், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் தென்னக ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசலைத் தவிா்க்க தென்னக ரயில்வே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் முழுக்க முழுக்க முன்பதிவில்லா பெட்டிகளைக் கொண்டிருந்ததால் பயணிகளிடையே நல்வரவேற்பைப் பெறுகிறது. இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவுக்கு, திருச்செந்தூா், திருப்பரங்குன்றம், சுவாமிமலை ஆகிய பகுதிகளுக்கு அதிகளவில் பக்தா்கள் சென்று வருவாா்கள். இதனால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க கும்பகோணம், தஞ்சாவூா் வழித்தடத்தில் திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் ஏ. கிரி கூறியது: தைப் பூசத் திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தா்கள் வருகின்றனா். ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பயணச்சீட்டுகள் விற்பனை முடிந்து விடுகிறது. எனவே பக்தா்கள் நலன்கருதி கூட்ட நெரிசலைத் தவிா்க்க கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com