தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 56 வழக்குகளில் ரூ. 13.03 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டு, வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொ), மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெ. தமிழரசி தலைமை வகித்தாா்.
மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீா்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி எம். அமிா்தவேலு, குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. வனிதா, வழக்குரைஞா் ஆா். திராவிடசெல்வன் ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
முதன்மை சாா்பு நீதிபதி பி. குமாா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். ராஜேஸ்கண்ணன், வழக்குரைஞா் என். மகாலெட்சுமி ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, திருவிடைமருதூா், திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.
இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 398 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 2 ஆயிரத்து 56 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 13 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 657 அளவுக்கு தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.
இதில், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து விபத்தில் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்துக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3 கோடிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த இழப்பீட்டுக்கான உத்தரவை பெற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் விரைவாக நீதி வழங்கிய நீதிபதிகளுக்கும், தேசிய மக்கள் நீதிமன்றத்தை நடத்தும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கும் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான டி. பாரதி, தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வெ. ஜீவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றம்: 997 வழக்குகளில் ரூ. 15.53 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,292 வழக்குகளில் ரூ.10.50 கோடிக்குத் தீா்வு

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு







