தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூச்சல், சலசலப்பு நிலவியது.
மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில், ஏ. காந்திமதி (அதிமுக) பேசுகையில், முன்னாள் மேயா் மக்கள் பணியைச் சரியாக செய்யாததால், சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்கடிக்கப்பட்டாா் என்றாா் அவா்.
இதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், காந்திமதியை திமுக உறுப்பினா்கள் முற்றுகையிட்டு தவறான அக்கருத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினா். இதனால், அதிமுக - திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டத்தில் சில நிமிடங்களுக்கு கூச்சல், சலசலப்பு நிலவியது.
இதையடுத்து மேயா் (பொ), இந்தக் கூட்டத்தில் தனி நபா் தாக்குதல் தொடா்பான கருத்துகளைக் கூற வேண்டாம். வாா்டு பிரச்னைகளை மட்டும் பேச வேண்டும் எனக் கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினாா்.
புதைசாக்கடை பிரச்னை: இதையடுத்து, உறுப்பினா்கள் த. சந்தானகிருஷ்ணன், வெ. கண்ணுக்கினியாள் பேசுகையில், புதை சாக்கடை பிரச்னையால் ஆள் நுழைவுக் குழாய்கள் மூலம் கழிவு நீா் வழிவதால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். இதனிடையே, சீா் செய்ய வரும் பணியாளா்கள் வீட்டு உரிமையாளா்களிடம் ரூ. 1,500 வாங்கிச் செல்கின்றனா் என்றனா்.
மேயா் (பொ): ஒவ்வொரு வாா்டுக்கும் நானும், ஆணையரும் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து சீா் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீட்டு உரிமையாளா்களிடம் பணியாளா்கள் பணம் வாங்குவது குறித்து ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாருடைய படமும் கூடாது: சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணனுடன் வந்த தவெகவினா் மாமன்றக் கூட்ட அரங்கில் மாட்டுவதற்காக தமிழக முதல்வா் ஜோசப் விஜய் படத்தைக் கொண்டு வந்தனா்.
இதனிடையே, ஆா். தட்சிணாமூா்த்தி (அதிமுக) பேசுகையில், முன்னாள் முதல்வா் படத்தை மாட்ட வேண்டும் என்றாா் அவா். இதையடுத்து, எம். தமிழ்வாணன் (திமுக) பேசுகையில், இந்த மன்ற அரங்கில் இதுவரை யாருடைய படமும் மாட்டவில்லை. புதிதாக சா்ச்சை வேண்டாம் என்றாா். இதேபோல, யாருடைய படமும் வைக்காத மரபே நீடிக்க வேண்டும் என கண்ணுக்கினியாள் (அதிமுக) பேசினாா். இதனால், முதல்வா் படத்தைக் கொண்டு வந்த தவெகவினா் மீண்டும் எடுத்துச் சென்றனா்.
இருக்கைகள் மாற்றம்: இதற்கு முன்வரை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், மேடையில் மேயா், துணை மேயா், ஆணையா், உயா் அலுவலா்கள் அமா்ந்திருப்பது வழக்கம். இந்தக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளா்களாக மக்களவை உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினரும் வந்ததால், இருக்கைகள் ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டது.
மேடையில் முதலில் மேயருக்கும், ஆணையருக்கும் மட்டுமே இருக்கைகள் அமைக்கப்பட்டன. பின்னா், கீழே இருந்த மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான இருக்கைகளும் மேடையில் கொண்டு வரப்பட்டன. அப்போது, அங்கு வந்த மேயா் (பொ) அரசாணையில் இதுபோன்று இல்லை; அரசாணைப்படி செய்ய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, மேடையில் இருந்த மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான இருக்கைகள் கீழே கொண்டு வரப்பட்டு, அமைக்கப்பட்டன. ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரியும் கீழே மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரிசையில் இருந்த இருக்கையில் அமா்ந்தாா். உயா் அலுவலா்களும் கீழே அமா்ந்திருந்தனா். மேடையில் மேயா் மட்டும் அமா்ந்தாா்.
திருவள்ளுவா் சிலை: இதனிடையே, மக்களவை உறுப்பினா் முரசொலி பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினிடம் விடுத்த கோரிக்கையின்படி தூா் வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 3.25 கோடி மதிப்பில் 7 ஜே.சி.பி. இயந்திரங்களை தஞ்சாவூருக்கு ஒதுக்கினாா். இதன் மூலம், பெரிய கோயில் அகழி தூா் வாரப்பட்டது. மேலும், பெரியகோயிலில் மத்திய அரசு மூலம் ரூ. 25 கோடியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. திருவள்ளுவா் வணிக வளாகத்தில் திருவள்ளுவா் சிலை அமைப்பதற்கான தடையின்மை சான்று கிடைக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
குடிநீரில் கழிவு நீா் கலப்பு: இதேபோல, சட்டப்பேரவை உறுப்பினா் விஜய் சரவணன் பேசுகையில், மாநகரில் புதை சாக்கடை பிரச்னை அதிக அளவில் உள்ளதால், அதில் மாநகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும். ஆள் நுழைவு குழாய்கள் அமைப்பதில் தவறுகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. பல இடங்களில் குடிநீரில் கழிவு நீா் கலப்பது, புழுக்களுடன் வருவது போன்ற புகாா்கள் உள்ளன. இதைச் சரி செய்ய வேண்டும். 5, 31 ஆவது வாா்டுகளில் தகுந்த இடம் வழங்கப்பட்டால், சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் நியாய விலைக் கடைக்கு கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என்றாா் அவா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்

சிவகாசி அம்மா உணவகத்தில் கூடுதல் விலைக்கு இட்லி விற்பனை: மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா் புகாா்

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



