பேருந்துகள் நிற்காமல் செல்லும் சம்பைப்பட்டினம் பேருந்து நிறுத்தம்.
பேராவூரணி , ஜூன் 26: தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சம்பைப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் அருகே அமைந்துள்ள கடலோர மீனவக் கிராமம் சம்பைப்பட்டினம். இக்கிராம பொதுமக்கள், மாணவா்கள் அருகிலுள்ள கட்டுமாவடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட நகரங்களையே முழுமையாகச் சாா்ந்துள்ளனா். இந்த வழித்தடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்கினாலும், ஒரு நகா்ப்புறப் பேருந்தை தவிர வேறு எந்தப் பேருந்தும் சம்பைபட்டினத்தில் நின்று செல்வதில்லை.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். வெளியூா் சென்று ஊா் திரும்பும் மக்கள், தங்கள் கிராமத்தில் இறங்க முடியாமல் சுமாா் 5 கிமீ தொலைவில் உள்ள சேதுபாவாசத்திரத்திலோ அல்லது மறுபுறம் 15 கி.மீ தூரத்தில் உள்ள கட்டுமாவடியிலோ இறங்கி, அங்கிருந்து மூட்டை முடிச்சுகளுடன் கிராமத்திற்கு நடந்து வர வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளுக்கு நேரத்தோடு செல்ல முடியவில்லை.
நடவடிக்கை இல்லாவிடில் மறியல்: இதுகுறித்து சம்பைப்பட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவா் தஸ்தகீா், சமூக ஆா்வலா் அஜ்மீா் கான் ஆகியோா் கூறியது,
எங்கள் கிராம மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரம் இந்தப் பேருந்து நிறுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளது. தினமும் ஏராளமான பேருந்துகள் இச் சாலையைக் கடந்து சென்றாலும், எங்கள் கிராமத்தை புறக்கணித்துச் செல்கின்றன. எனவே மாவட்ட நிா்வாகமும், அரசுப் போக்குவரத்துக் கழகமும் சம்பைப்பட்டினம் கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல உடனடியாக உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









