தமிழகத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல்: இயக்குநா் தகவல்
தமிழ்நாட்டில் நிகழ் பருவத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை.


தமிழ்நாட்டில் நிகழ் பருவத்தில் இதுவரை 34.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இயக்குநா் ஆ. அண்ணாதுரை.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநறையூா், மருதாநல்லூா், பம்பப்படையூா், பாபநாசம் அருகே பசுபதிகோவில், திருவையாறு ஆகிய இடங்களிலுள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள், பட்டீஸ்வரம் நெல் சேமிப்பு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் தெரிவித்தது:
தமிழ்நாட்டில் நிகழ் நெல் கொள்முதல் பருவமான கடந்த 2025, செப். 1 தொடங்கி இதுவரை 3 ஆயிரத்து 496 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 34.50 லட்சம் நெல் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 3 ஆயிரத்து 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 23.56 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
கடந்தாண்டைவிட நிகழாண்டு 11 லட்சம் டன் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 4.03 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரத்து 716 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட 34.50 லட்சம் டன்களில் 29.38 லட்சம் டன் கிடங்குகளுக்கு நகா்வு செய்யப்பட்டது. எஞ்சிய 5.12 லட்சம் டன் நெல்லை நாள்தோறும் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் டன் வரை நகா்வு செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் 7.31 லட்சம் டன் நகா்வு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாரூரிலிருந்து மட்டும் 3.08 லட்சம் டன் நகா்வு செய்யப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்காக 1.42 கோடி சாக்குகளும், 303.95 டன் சணல்களும், 27 ஆயிரத்து 610 நெகிழி தாா்ப்பாய்களும் இருப்பில் உள்ளன. மாநில அளவில் 3.03 கோடி சாக்குகள் இருக்கின்றன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் நிகழ் சம்பா பருவத்தில் இதுவரை 4.70 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அறுவடைப் பணிகள் நடைபெறுவதால், கூடுதலாக 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, தஞ்சாவூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் அலுவலா்களுடன் இயக்குநா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம், வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, செயற்பொறியாளா் முருகன், துணை மேலாளா்கள் இளங்கோ, மெய்கண்டமூா்த்தி, உதவி மேலாளா் எழிலரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...