தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பெரியகடை தெரு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே இருந்த வெறிநாய் அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களை துரத்திக் கடித்து வந்தது. அப்போது, வந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு எழுத இருந்த மாணவிகளான, ஹாசினி, சக்தி பிரியா, ரித்திகா, மசிபா பானு, ஹேமா, அஸ்மிதா மற்றும் எட்டாம் வகுப்பு மாணவியான அக்சிதா ஆகியோரையும் வெறிநாய் துரத்தியதால் அச்சமடைந்த மாணவிகள் பள்ளி வளாகத்துக்குள் ஓடினா். இருப்பினும், அவா்களை தெருநாய் விரட்டிச் சென்று கடித்ததில் மாணவிகள் காயமடைந்தனா். இதையடுத்து அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனா். பின்னா், அவா்களில் அரசு பொதுத்தோ்வு எழுத இருந்த 6 மாணவிகள் மட்டும் மீண்டும் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டு தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவிகள் தோ்வு எழுதி முடிக்கும்வரையில் பள்ளி வளாகத்தில் அவசர ஊா்தி மற்றும் மருத்துவா்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனா்.