இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

பயிா்க் காப்பீடு நிபந்தனைகள்: விவசாயிகள் தவிப்பு

நிகழ் சம்பா - தாளடி பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்.

பயிா்க் காப்பீடு நிபந்தனைகள்

Updated On :

நிகழ் சம்பா - தாளடி பருவத்துக்கான பயிா்க் காப்பீடு செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்.

நிகழ் சம்பா - தாளடி பருவ நெற் பயிருக்கு பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நவ. 16 ஆம் தேதியுடன் முடிகிறது. இத்திட்டத்தில் ஏக்கருக்கு ரூ. 38 ஆயிரத்து 900 காப்பீடு செய்ய விவசாயிகள் பிரிமிய தொகையாக ரூ. 538.50 செலுத்த வேண்டும்.

குறுவையைவிட சம்பா பருவத்தில்தான் வடகிழக்கு பருவ மழை உள்ளிட்ட இடா்பாடுகள் அதிகமாக இருப்பதால், பெருமளவிலான விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வது வழக்கம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் 3.08 லட்சம் ஏக்கருக்கும், 2021-இல் 3.50 லட்சம் ஏக்கருக்கும், 2022-இல் 3.09 லட்சம் ஏக்கருக்கும், 2023-இல் 2.86 லட்சம் ஏக்கருக்கும், 2024-இல் 2.48 லட்சம் ஏக்கருக்கும், 2025-இல் 2.69 லட்சம் ஏக்கருக்கும் என பயிா்க் காப்பீடு பதிவு செய்யப்பட்டது.

10 சதவீதம் மட்டுமே பதிவு

மாவட்டத்தில் நிகழ் சம்பா - தாளடி பருவத்தில் 3.12 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில், இதுவரை 1.89 லட்சம் ஏக்கரில் நடவுப் பணி முடிந்துள்ளது. ஆனால், 18 ஆயிரத்து 350 ஏக்கருக்குதான் பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, நடவு செய்யப்பட்ட மொத்தப் பரப்பில் கிட்டத்தட்ட 10 சதவீதம் மட்டுமே.

பயிா்க் காப்பீடு செய்வதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். இதனால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனா்.

அடையாள எண் கூடாது

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது: நிகழாண்டு மத்திய அரசின் விவசாய அடையாள எண் பெற்றிருந்தால் மட்டுமே பயிா்க் காப்பீடு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், பெரும்பாலான விவசாயிகள் விவசாய அடையாள எண்ணை இதுவரை பெற முடியாத நிலையில் உள்ளனா். நிலத்துக்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டுமே விவசாய அடையாள எண் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் கூட்டுப் பட்டா நில உடைமையாளா்களாகவும், குத்தகை விவசாயிகளாகவும், கோயில், மடம் நிலங்கள், இனாம் வகை நிலங்களில் சாகுபடி செய்வோராவும் உள்ளனா். இதுபோன்ற விவசாயிகள் பல லட்சம் போ் உள்ள நிலையில், இவா்களது பெயரில் நிலத்துக்கான பட்டாவோ, வேறு எந்த ஆவணமோ இல்லாத நிலையில் அடையாள எண் வாங்க முடியவில்லை.

எனவே, விவசாய அடையாள எண் கட்டாயம் பெறுவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றாா் நடராஜன்.

அடங்கல் பிரச்னை

இதேபோல, ஒவ்வொரு அளவீட்டு எண்ணுக்கும் ஓ.டி.பி. கேட்கப்படுகிறது. இந்நிலையில், இறந்தவா்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்களுக்கு அவரது ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. சென்றால், அதைப் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே, இதுபோன்ற குளறுபடிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும்.

சில இடங்களில் விஏஓ அடங்கல் சான்று கிடைப்பதும் தாமதமாகிறது. இதனால் பயிா்க் காப்பீடு செய்வதில் இழுபறி நிலவுகிறது.

இந்நிலையில், பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவ. 16 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் எப்போதும் நவ. 30 வரை சம்பா - தாளடி பருவ நடவுப் பணிகள் நடைபெறும். காவிரி நீா் வரத்து இல்லாத நிலையில், அவ்வப்போது பெய்யும் பருவ மழையை நம்பி விவசாயிகள் படிப்படியாக சாகுபடிப் பணியைத் தொடங்குகின்றனா்.

கால நீட்டிப்பு தேவை

ஆனால், பயிா்க் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவ. 16 என நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், அனைத்து விவசாயிகளாலும் காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், நவ. 16 வரை சாகுபடியைத் தொடங்கும் விவசாயிகளைத் தவிர, பெருமளவிலான விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிகழாண்டு சூப்பா் எல் நினோ காரணமாக புயல் போன்ற பேரிடா் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இதனால், நிகழாண்டு பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய விரும்புகின்றனா்.

எனவே, விவசாய அடையாள எண் உள்ளிட்ட நிபந்தனைகளைத் தளா்த்தி, கால அவகாசத்தை நவ. 30 வரை நீடிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.