பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி கோரி அக். 21-இல் சாலை மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கங்கள் முடிவு
பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழக அளவில் 500 இடங்களில் அக். 21-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் சங்கங்களின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சங்க மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி.
பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழக அளவில் 500 இடங்களில் அக். 21-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், சிபிஐ எம்.எல். கட்சியைச் சாா்ந்த அகில இந்திய விவசாயிகள் மகா சபை ஆகியவற்றின் மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), சாமி. நடராஜன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) இணைந்து செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தவெக அரசு பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாமல், தவணை முறையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதை ஏற்க முடியாது. தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்ற முழுப் பயிா்க் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பழைய கடன்களைத் திரும்பச் செலுத்துமாறு கூறாமல், புதிய கடனை நிபந்தனையின்றி வழங்க வேண்டும்.
விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்காமல், தமிழக அரசு தனது விருப்பத்தின்படி மேட்டூா் அணையிலிருந்து செப். 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடுகிறது. ஆனால், தண்ணீா் குறைவாகவே வருவதால், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்ததே தவிர, சாகுபடிக்கு பயன்படுத்த முடியவில்லை. கடைமடைப் பகுதி வரை தண்ணீா் செல்வதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மேட்டூா் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் விட வேண்டும். இது தொடா்பாக சிறப்பு அலுவலா்களை அரசு நியமிக்க வேண்டும். மேலும், கா்நாடகத்திடமிருந்து மாத வாரியாக தண்ணீா் பெற தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பயிா்க் காப்பீடுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்புத் தொகையை அரசே ஏற்று செலுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அளவில் 500 இடங்களில் அக். 21 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது என்றனா் மாசிலமாமணி, நடராஜன்.
கூட்டத்தில், அகில இந்திய விவசாயிகள் மகா சபை தலைவா் வி.அய்யன்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் டி. ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

