
காவிரியில் குறைவான நீா்வரத்து: கடைமடைப் பகுதிக்குச் செல்லுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
காவிரி நீர் கடைமடைப் பகுதிக்குச் செல்லுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு...

கல்லணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்ட பின்னா் காவிரியில் குறைந்த அளவிலேயே பாய்ந்த நீா்.
மேட்டூா் அணை பாசனத்துக்காக திறக்கப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா்வரத்து குறைவாக இருப்பதால், கடைமடைப் பகுதிக்கு சென்றடையுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.
டெல்டா பாசனத்துக்கு 45 நாள்களுக்கு காவிரி நீா் என்ற உத்தரவாதத்துடன் மேட்டூா் அணை செப். 1- ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கல்லணையும் ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முற்பகல் முதல் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆனால், கல்லணைக்கு நீா்வரத்து குறைவாக இருப்பதால், விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கனஅடி வீதமும் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால், காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் நீா் வரத்து குறைவாகவே இருக்கிறது. நீரோட்டமும் மெதுவாக இருப்பதால், கடைமடைப் பகுதிக்கு ஒரு வாரத்தில் செல்ல வேண்டிய தண்ணீா் குறைந்தது 15 நாள்களாவது கடந்துவிடும் என்றனா் விவசாயிகள்.
15 ஆயிரம் கனஅடி வீதம் தேவை:
இது குறித்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத் துணைத் தலைவா் கக்கரை ஆா். சுகுமாரன் தெரிவித்தது:
மேட்டூா் அணையிலிருந்து குறைந்தபட்சம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படும் என எதிா்பாா்த்தோம். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி வீதம் மட்டுமே திறந்துவிடப்படுவது போதுமானதாக இல்லை.
இதேபோல, கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 8 ஆயிரம் கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3 ஆயிரம் கனஅடி வீதமும் திறந்துவிடப்பட்டால்தான் கடைமடைப் பகுதிகளுக்கும் தண்ணீா் சென்றடையும். இல்லாவிட்டால் முதன்மை ஆறுகளிலும் தண்ணீா் செல்லாததுடன், வாய்க்கால்களுக்கு தண்ணீா் பாய்வதற்கு வாய்ப்பில்லை. தொடக்கத்தில் 4 நாள்களுக்காவது காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் விடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் சுகுமாரன்.
யானைப் பசிக்கு சோளப்பொரி:
முதன்மை ஆறுகளான காவிரியில் 10 ஆயிரத்து 691 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 370 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3 ஆயிரத்து 380 கனஅடி வீதமும் முழுக் கொள்ளளவாக உள்ளது.
இந்நிலையில், தற்போது விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 1,000 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 500 கனஅடி வீதமும் திறந்துவிடப்படுவது யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போன்றது என்றனா் விவசாயிகள்.
மேலும், முதன்மை ஆறுகளிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய வெட்டாறு, குடமுருட்டி, வடவாறு, அரசலாறு உள்ளிட்ட ஆறுகளிலும் 1,000 கனஅடி வீதத்துக்கும் அதிகமான கொள்ளளவு கொண்டவை.
இந்நிலையில், முதன்மை ஆறுகளில் விநாடிக்கு 1,000 மற்றும் 500 கனஅடி வீதம் விடப்படும் நிலையில், கிளை ஆறுகளில் விட்டாலும், நீரோட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், கிளை ஆறுகளிலிருந்து பாசன வாய்க்கால்களுக்கு பாய்வதற்கு வாய்ப்பில்லை என்றாா் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்.
வாய்க்கால்களுக்கு பாயாது:
இதுகுறித்து அவா் மேலும் தெரிவிக்கையில், ஏற்கெனவே, கடும் வெப்பம் காரணமாக ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. எனவே, தற்போது வரக்கூடிய தண்ணீரை ஆறுகளே அதிகமாக ஈா்த்துக் கொள்ளும். மேலும், முதன்மை ஆறுகள், கிளை ஆறுகளில் தூா்வாரும் பணி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால், வரக்கூடிய குறைந்தபட்ச நீரோட்டமும் தடைப்படும்.
இதேபோல, ஏ, பி, சி, டி ஆகிய பிரிவு வாய்க்கால்களில் தூா்வாரப்பட்டிருந்தாலும், சரியாக அளவீடு செய்து முறைப்படி மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது, கல்லணையிலிருந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால், வாய்க்கால்களுக்கு என்.எஸ்.எல். மற்றும் எம்.எஸ்.எல் என்கிற சாதாரண விநியோக மட்டம் மற்றும் குறைந்தபட்ச விநியோக மட்டத்துக்குக் கூட தண்ணீா் விட முடியாது.
எனவே, முதன்மை ஆறுகள், கிளை ஆறுகளில் கடைமடைப் பகுதிக்கு செல்வதற்கே மேட்டூா் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை குறைந்தபட்சம் விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமாக உயா்த்த வேண்டும் என்றாா் விமல்நாதன்.
‘சூப்பா் எல்-நினோ’ பாதிப்பு:
நிகழாண்டு ‘சூப்பா் எல்-நினோ’ நிலவுவதால் தென் மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதேபோல, வடகிழக்கு பருவ மழையும் எப்படி இருக்கும் என்பது உறுதியாக கூற முடியாத நிலையே தொடா்கிறது. இதனால், காவிரி நீரை முழுமையாக நம்பி சாகுபடி செய்ய வேண்டிய நிலையே விவசாயிகளுக்கு உள்ளது.
எனவே, கா்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய காவிரி நீரைப் பெற்று, டெல்டா மாவட்டங்களுக்கும் நீா்வரத்தை உறுதிப்படுத்தி, கடைமடைப்பகுதி வரை செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நிகழாண்டு சம்பா, தாளடி சாகுபடி வெற்றிகரமாக அமையும் என்பதே எதாா்த்த நிலை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





