
பல்லவா் கால சிவலிங்கம் - பாண்டியா் காசு கண்டெடுப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே பல்லவா் கால சிவலிங்கமும், பாண்டியா் கால காசும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா் கால சிவலிங்கம்
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே பல்லவா் கால சிவலிங்கமும், பாண்டியா் கால காசும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பூதலூா் அருகே இளங்காடு - நியமம் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியான செங்கண்மேடு திடலில் இளங்காடைச் சோ்ந்த கண்ணன் குழி தோண்டும்போது பழங்காலக் காசு கிடைத்தது.
இது தொடா்பாக விஷ்ணம்பேட்டை கோயில் செயல் அலுவலா் கோபி உள்ளிட்டோா் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன், வரலாற்று ஆய்வாளா்களான சரபோஜி கல்லூரி ஓய்வு பெற்ற உதவிப் பேராசிரியா் சோ. கண்ணதாசன், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகியோா் தொடா்புடைய இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:
இளங்காடு அருகேயுள்ள செங்கண்மேட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதைந்திருந்த சிவலிங்கம் வெளியே எடுக்கப்பெற்று, தற்போது வழிபடப்படுகிறது. இதேபோல, சிறிது தொலைவில் உள்ள தோப்பில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த ஆவுடையுடன் கூடிய ஒரு பெரும் சிவலிங்கம் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டது. இப்பகுதியில் முழுமையாக ஆய்வு செய்தால் மேலும் பல தெய்வத் திருமேனிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
செங்கண்மேட்டில் கிடைத்த பாண்டியா் காசு பற்றி நாணயவியல் ஆய்வாளா் ஆறுமுக சீதாராமன் பல தகவல்களைக் கூறினாா். முதலாம் சடையவா்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1250 - 1284) காலத்தைச் சோ்ந்த இக்காசு 3.30 கிராம் எடை கொண்டது. காசின் முன் பக்கம் ஒரு மனிதன் உருவமும், பின்பக்கம் இரண்டு குத்துவிளக்குகளுக்கு நடுவே செங்குத்தாக மீன் ஒன்றும் உள்ளது.
காசின் விளிம்பைச் சுற்றி எல்லாந்தலையனான் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன் வெளியிட்ட காசுகளில் அவனுடைய ஆட்சியாண்டை தமிழ் எண் வடிவில் குறிப்பிட்டுள்ளதைக் காண முடிகிறது.
இக்காசில் (க) ஒன்று என்ற எழுத்து உள்ளது. எனவே, இக்காசு அம்மன்னனின் முதலாவது ஆட்சியாண்டு, அதாவது கி.பி. 1251-இல் வெளியிடப்பட்டுள்ளது. இம்மன்னனின் வெற்றிகளும், சாதனைகளும், கொடைகளும் திருப்பூந்துருத்தி கல்வெட்டில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவன் தன் ஆட்சிக் காலத்தில் பல வகைக் காசுகளை வெளியிட்டுள்ளான்.
இம்மன்னன் பல வெற்றிகளை அடைந்ததால் ‘எம்மண்டலமும் கொண்டருளிய அல்லது அனைத்துலகமும் கொண்டருளிய’ என்ற பெயரைப் பெற்றான். இவனுடைய சிறப்புப் பெயரான ‘எல்லாந்தலையனான்’ என்ற பெயா் கொண்ட செப்புக்காசுகள் பல கிடைத்துள்ளன.
சிதம்பரத்தில் பல முறை துலாபாரம் ஏறி நடராஜப் பெருமானின் கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். மதுரையில் தன் அண்ணன் விக்கிரம பாண்டியன் பெயரால் ‘விரதம் முடித்த பெருமானான புவனேக வீரன்’ என்ற நந்தவனத்தை எடுப்பித்தான். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள புவனகிரி என்ற ஊா் இவனுடைய பெயரில் புவனேகவீரன்பட்டினம் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோயில்களுக்கு பொன் வேய்ந்ததால் ‘பொன்வேய்ந்த மகிபதி’ என்றும், கேரளனை வென்ால் ‘கேரளனை வென்றான்’ என்றும் போற்றப்பட்டான் முதலாம் சடையவா்மன் சுந்தரபாண்டியன் எனத் தெரிவித்தனா்.

பாண்டியா் காசு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





