மக்கள் நீதிமய்யத்தின் முழு கொள்கைகள் 5 மாதங்களில் தயாரிக்கப்படும் என்றார் அதன் தலைவர் கமல்ஹாசன்.
திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் கடந்த 2016-இல் நடந்த நிகழ்வுகள் இப்போது ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போது 4 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்ட நுணுக்கங்களைத் தயாரித்து சாக்கு, போக்கு காட்டி மேலாண்மை வாரியம் அமைப்பது தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.
தமிழக அரசு அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தோ, போலியான ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயலாமைகளை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடிபோல தமிழக அரசு நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் காவிரிப் பிரச்னையை பற்றி முக்கியமாக விவாதிக்கும். வெறும் பிரச்னைகள் மட்டும் பேசாது, தீர்வுக்கான வழிகளையும் முன் நிறுத்தும். இதுவரை நடந்த எங்களது ஆய்வுகளின்படி முக்கிய துறைகளில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடுகள் அறிவிக்கப்படும். இந்தக் கோட்பாடுகளை மய்யமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் மக்கள் நீதி மய்யத்தின் முழுக் கொள்கைகள் தயாரிக்கப்படும்.
தமிழக முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் ஒருமையில் பேசி அரசியல் நடத்தும் வழக்கம் என்னிடம் கிடையாது. வெள்ளையனே வெளியேறு என்பதற்கு பதிலாக, டேய் வெளியே போங்கடா எனக் கூற வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ரயில் பயணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காத வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கு முன்னரும் இதேபோல் அறிவித்து ரயில் பயணம் செய்துள்ளேன். ஆனால், இப்போது நான் அரசியல்வாதி என்பதால் அது அரசியலாக்கப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக திரையுலகம் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்பேன், அதுவும் என் உலகம். மக்கள் நீதி மய்யம் என்பது மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் என்றார் கமல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








