திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் மயானத்தில் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் குப்பைகளை கொட்டி வைத்துள்ள ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து கிராமமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வையம்பட்டி மயானத்திற்கு புதன்கிழமை மாலை, கடந்த சிலதினங்களுக்கு முன்பு இறந்து அடக்கம் செய்தவரின் உறவினர்கள் காரியம் செய்வதற்காக வந்துள்ளனர். அங்கு இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 3 அடிக்கு மேல் ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை கொட்டியிருந்தனர். அதே நேரத்தில் இறந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து வந்தனர். அவர்களும் உடலை அடக்கம் செய்யமுடியாதபடி மலைபோல் குப்பைகளை கொட்டி இருந்ததால் திகைத்து நின்றனர். இதனால் ஆத்திரமடைந்த இருதரப்பு உறவினர்களும் மயானத்தை விட்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளர்கள் ரெக்ஸ் ஸ்டாலின், நல்லதம்பி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து வியாழக்கிழமை குப்பைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு, இறந்தவரின் உடலை மயானத்தின் ஒரு ஓரத்தில் அடக்கம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.