/

1.17 லட்சம் விவசாயிகளுக்கு உதவித் தொகை: ஆட்சியர் தகவல்

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஒரு

Updated On :25 பிப்ரவரி 2019, 8:58 am IST

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதன், முதல்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு உதவித் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கி ஆட்சியர் சு. சிவராசு பேசியது:  திருச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 787 சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். 
இதில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நகர்ப்புறம் நீங்கலாக 481 வருவாய் கிராமங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ஆய்வு செய்து ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 பேரை இணைத்துள்ளனர். இந்தப் பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தகுதியான விவசாயிகள் தொடர்ந்து இணைக்கப்படுவர் என்றார் ஆட்சியர்.
விழாவில், 100 விவசாயிகளுக்கு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல, மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களிலும் தலா 40 விவசாயிகள் என மொத்தம் 700 பேருக்கு முதல் தவணை வழங்கப்பட்டது.
இதில், மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பால்ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குநர் ஆர். ரவி மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடி: லால்குடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 
விழாவிற்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி தலைமை வகித்து, முதல் தவணையாக 723 விவசாயிகளுக்கு (பயனாளிகளுக்கு) நிதி வழங்குவதற்கான சான்றுகளை வழங்கிய அவர் மேலும் பேசியது: 
லால்குடி பகுதியில் மட்டும் 23 ஆயிரம் பட்டாதாரர்கள் (விவசாயிகள்) உள்ளனர். ஆனால்  உரிய ஆவணங்களுடன், ஆன்லைன் பதிவு செய்திருந்த 19 ஆயிரத்து 800 விவசாயிகளுக்கு (பட்டாதாரர்கள்)  தேர்வு செய்யப்பட்டனர் என்றார். 
விழாவில் லால்குடி வருவாய் வட்டாட்சியர் சத்திய பாலகங்காதரன்,  லால்குடி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய  உதவி இயக்குநர்  ஜெயராகினி மற்றும் வேளாண், வருவாய்த் துறை  அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.