/

அரசுப் பதிவேடு, கோப்புகளை தமிழில் கையாள உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கையாளப்படும் அரசுப் பதிவேடுகள், கோப்புகள்

Updated On :23 ஜனவரி 2019, 8:16 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கையாளப்படும் அரசுப் பதிவேடுகள், கோப்புகள் முழுவதும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி அறிவுறுத்தினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம்  மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த பயிலரங்கத்தை தொடக்கி வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தா. சாந்தி பேசியது:
தாய்மொழி மீது பற்று இருந்தால் மட்டுமே தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 
தமிழ் வளர வேண்டுமெனில் தாய்மொழியில் பேசுவதையும், எழுதுவதையும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாகவே தமிழ் மொழி வீற்றிருக்கிறது. எனவே, அரசு துறைகளில் பணிபுரியும் ஒவ்வொருவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும். இதற்கென அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும்.
பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. 
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே இருத்தல் அவசியமானது. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும். ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தி அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், தமிழில் கோப்புகளை சிறப்பாக கையாளும் ஊழியர்களுக்கு பரிசுகளும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 
இவற்றை இப்போது பணிபுரியும் ஊழியர்கள் நடைமுறை சாத்தியமாக்கினால் அடுத்தடுத்து வரும் தலைமுறையைச் சேர்ந்த அரசு ஊழியர்களும் தமிழில் மட்டுமே கோப்புகளை கையாளுவது வாடிக்கையாகக் கொள்வர் என்றார் அவர்.
இதில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் புலவர் ஆறுமுகம், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.சிவசாமி, ஓய்வு பெற்ற துணை இயக்குநர் துரை. தம்புசாமி ஆகியோர் பேசினர். 
பயிலரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அரசாணைகள், செயலாக்கம் மற்றும் தமிழில் அலுவலக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.