விவசாயிகளுக்கு ஆதரவாக ஆட்சியரகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் தொடக்கம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு காத்திருப்புப் போராட்டம்


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திருச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அரசியல் கட்சிகளின் விவசாய அமைப்புகள் இணைந்து மேற்கொள்ளும் காத்திருப்புப் போராட்டம் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைரத்து செய்ய வலியுறுத்தி, புதுதில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டங்களை ரத்து செய்து திரும்பப் பெறக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, போராட்டக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை சிவசூரியன் தலைமை வகித்தாா்.
மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, மதிமுக மாவட்டச் செயலா்கள் மாநகா் வெல்லமண்டி என்.சோமு, புகா் வடக்கு டி.டி.சி. சேரன், புகா் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், மூத்த நிா்வாகி புலவா் முருகேசன், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் வி.ஜவஹா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க நிா்வாகி கே.சி. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தமிழாதன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சோ்ந்த செழியன், கோவன் உள்ளிட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று பேசினா்.
தொடா்ந்து ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்றவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 100 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் இதே பகுதியில் கஞ்சி காய்ச்சும் போராட்டமும் நடத்தப்பட்டது.
2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக, ஆட்சியரகத்துக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...