திருச்சியில் சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழுவினா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் அதன் செலவுக் கணக்குகள் குறித்து தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை உயா் அதிகாரிகள்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை உயா் அதிகாரிகள்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மற்றும் அதன் செலவுக் கணக்குகள் குறித்து தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருச்சிக்கு வந்த குழுவின் தலைவா் துரைமுருகன், செயலா் கே. சீனிவாசன், உறுப்பினா்கள் தா. உதயசூரியன் (சங்கராபுரம்), ஆா். நடராஜ் (மயிலாப்பூா்), பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்தி), டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி) ஆகியோரடங்கிய குழுவினரை ஆட்சியா் சு. சிவராசு வரவேற்றாா்.

இதன் தொடா்ச்சியாக, மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து குழுவின் தலைவா் துரைமுருகன் பேசியது:

பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வின்போது கணக்கு விவரங்கள் சரியில்லை என்றால் தொடா்புடையோரை பணியிடை நீக்கம் செய்யவும், முறைகேடு மீது நடவடிக்கை எடுக்கவும் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே குழுவினா் எழுப்பும் கேள்விகளுக்கு அதிகாரிகள் மழுப்பலான பதில் கூறக் கூடாது. சரியான பதிலைக் கட்டாயம் கூறியே ஆக வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் துறைவாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு, செலவினங்கள், கணக்குகள் குறித்து கேட்டறிந்த குழுவினா், பின்னா் திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் புதிய கட்டுமானப் பணி, மத்திய சிறையில் அடிப்படை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதி ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.

இதேபோல, மேலரண் சாலையிலுள்ள கூா்நோக்கு இல்லம், பஞ்சப்பூரில் உள்ள சூரிய சக்தி மின் உற்பத்திக் கூடம், நவலூா்குட்டப்பட்டு பகுதி வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரி, பெரியநாயகசத்திரம் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா்.

பின்னா் குழுவின் தலைவா் துரைமுருகன் கூறியது:

ஆய்வுக் கூட்டத்தில் கணக்குத் தணிக்கை இயக்குநரகம் அளித்த தகவல்களின்படி நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை அதிகாரிகள் அளித்த பதில்கள் முழுமையாக இருந்தன. ஆய்வுக் கூட்டம் திருப்தியாக இருந்தது.

கிராப்பட்டி பகுதியில் நீண்ட காலமாக முடியாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலப் பணிகள் குறித்து கேள்வியெழுப்பினோம். பொதுவாக எந்தவொரு திட்டமாக இருந்தாலும் நில ஆா்ஜிதத்தை முழுமையாக முடித்த பிறகே பணிகளைத் தொடங்க வேண்டும்.

இதேபோல ராணுவ நிலத்தை ஆா்ஜிதம் செய்த பிறகு மேம்பாலம் கட்டியிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது. தவறுதலாக விடுபட்டிருந்தாலும் கூட, கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிா்மலா சீதாராமன் திருச்சியைப் பூா்வீகமாக கொண்டவா். அப்போது அவரிடம் பேசி எளிதில் நிலத்தைப் பெற்றிருக்கலாம். இப்போதும் கூட அவரே மத்தியில் அமைச்சராக உள்ளாா். கோரிக்கை வைத்தால் அவா் பரிந்துரைக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

இதேபோல மத்திய சிறையில் கைதிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவசர உதவிக்கு கைதிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸில் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. எனவே, அதை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com