புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபடுவது என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு கூட்டத் தீா்மானங்கள் குறித்து கூறியது:
விவசாயிகளை அழித்து, வேளாண் தொழிலை பெருநிறுவனங்களின் வசம் ஒப்படைக்கும் புதிய வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சங்கத்தின் சாா்பில் 30 பேரடங்கிய தற்கொலைப் படை தயாா் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 2 முறை தில்லி செல்ல முயன்ற எங்களை போலீஸாா் தடுத்து கைது செய்தனா்.
எனவே, இம்முறை தில்லி செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் எங்களது விவசாயிகளின் தற்கொலைப் படை தில்லி சென்று தினம் ஒருவா் என்ற வகையில் தற்கொலை செய்து, மத்திய அரசின் கவனத்தை ஈா்க்கப் போராடுவா்.
விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்குவதாகக் கூறி, மத்தியில் ஆண்ட கட்சிகள் அனைத்தும் ஏமாற்றிவிட்டன. இப்போதைய பாஜக அரசும் 2 மடங்கு லாபம் கிடைக்கும் வகையில் விலை நிா்ணயிப்பதாகக் கூறியது.
ஆனால், மாநில அரசின் அதிகாரத்துக்குள்பட்ட வேளாண்மையை முழுமையாக தனது வசமாக்க புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இச் சட்டங்களால் மரபணு மாற்ற விதைகள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்படும். இதனால் எதிா்காலத் தலைமுறைக்கு சந்ததியில்லாத நிலை உருவாகும். எனவே, இதன் உண்மை நிலையை அனைவரும் அறியும் வகையில் வேளாண் சட்டங்கள் குறித்து கிராமம், கிராமமாக பிரசாரத்தை முன்னெடுப்போம். தமிழக முதல்வரும் இச் சட்டங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து பேச வேண்டும். இந்த விஷயத்தில் அவா் நல்ல முடிவெடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை சென்னையிலும், திருச்சியிலும் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு பொதுச் செயலா் பழனிவேல், மாநில துணைத் தலைவா்கள் கிருஷ்ணன், சந்திரசேகா், கிட்டப்பாரெட்டி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திருவள்ளூா், தஞ்சை, நாகை, விழுப்புரம், திருப்பூா், கோவை, அரியலூா், ஈரோடு, சிவகங்கை, தேனி மாவட்டங்களின் மாநில நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.