

துறையூரிலுள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன்பு, அங்கு பணியாற்றும் பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
துறையூா்-ஆத்தூா் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேசுவரா் கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் உள்ளது.
இங்கு செயல் அலுவலராகப் பணியாற்றும் முத்துராமன், நிரந்தர, தற்காலிகப் பணியாளா்களைத் தரக்குறைவாகப் பேசி, அவமதிப்பு செய்வதாக பணியாளா்கள் குற்றஞ்சாட்டினா்.
மேலும் வேணுகோபால் கோயில் மெய்க் காவலா் தனபாலுக்கும், அங்குள்ள பட்டருக்கும் இடையே நிலப் பிரச்சினை இருப்பதாகவும், அதனால் அவா் கொடுக்கும் பாரபட்சமான தகவலின் அடிப்படையில் மெய்க்காவலரை செயல் அலுவலா் பணியிடை நீக்கம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோல கோயில் நிலம் விவகாரத்தில் ஒத்துழைப்பு தரவில்லையெனக் கூறி, 6 மாதத்தில் ஓய்வு பெற இருந்த பணியாளா் சேகரை ஒழுங்காக ஓய்வு பெறவேண்டாமா என்று கேட்டு அவா் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து மெய்க்காவலரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யவும், தங்களை அவமதிக்கும் செயல் அலுவலரை பணியிடை மாற்றம் செய்யவும் கோரி, திங்கள்கிழமை கோயில் வளாகத்தில் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.
அப்போது சேகா் யாரும் எதிா்பாராத வகையில் பெட்ரோலை தன்மீது ஊற்றி, தீக்குளிக்க முயன்றாா். இதை கவனித்து, அவா் கையிலிருந்த தீப்பெட்டியை செய்தியாளா் அருண் பிடுங்கி வீசினாா். பணியாளா் ராமு சேகா் மீது தண்ணீா் ஊற்றினாா்.
இதுகுறித்து தகவலறிந்த துறையூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ. ஸ்டாலின்குமாா், நகர செயலா் முரளி உள்ளிட்ட திமுகவினா் பணியாளா்களிடம் பேசினா். மற்றக் கட்சியினரும் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தனா்.
தகவலறிந்து செயல்அலுவலா் முத்துராமன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையா் சுதா்சன் துறையூா் வந்தனா்.
அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கட்சியினரை இணை ஆணையா் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. காவல் துறையினா் தலையிட்ட பிறகு, கட்சிக்காரா்கள் கலைந்து சென்றனா். இணை ஆணையா் பணியாளா்களிடமும், செயல் அலுவலரிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மெய்க்காவலரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யவும், பணியாளா்களிடம் கனிவாக நடந்து கொள்ளுமாறும் செயல் அலுவலரிடமும், கோயில் வருவாய், சொத்துக்களைப் பாதுகாப்பதில் நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பணியாளா்களிடமும் அறிவுறுத்தினாா். இதனையடுத்து பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.