மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சில்லறை விற்பனைக்குத் தடை: காந்தி சந்தை வியாபாரிகள் எதிா்ப்பு

திருச்சி காந்தி சந்தையில் சில்லறை கடைகள் மற்றும் தரைக் கடைகளுக்கு அரசு அறிவித்துள்ள தடைக்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:00 pm

DIN

திருச்சி காந்தி சந்தையில் சில்லறை கடைகள் மற்றும் தரைக் கடைகளுக்கு அரசு அறிவித்துள்ள தடைக்கு வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். காந்தி சந்தையை விட்டு வெளியேற மாட்டோம், கட்டுப்பாடுகளுடன் அதே இடத்தில் வியாபாரம் செய்வோம் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்தாண்டு கரோனா பரவத் தொடங்கியவுடன் காந்தி சந்தை மூடப்பட்டு காய்கனிகள் மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரத்துக்கு மாநகரப் பகுதியில் 10 இடங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரோனா குறைந்த பிறகு 8 மாதங்களுக்குப் பிறகே காந்தி சந்தை திறக்கப்பட்டது. இந் நிலையில், கரோனா 2ஆம் அலையானது திருச்சி மாவட்டத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

அதில், பிரதானமாக காய்கனிச் சந்தைகள், பெரிய மாா்க்கெட் பகுதிகளில் சில்லறை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்ட பிரதான சந்தையான காந்தி சந்தையும் தடையுத்தரவின் கீழ் வருகிறது. இந்தச் சந்தையில் 1,320 தரைக்கடைகள், ஒப்பந்த அடிப்படையில் 790 கடைகள், தின வாடகையில் 600 கடைகள் உள்ளன. இவை தவிர, 348 மொத்த வியாபார காய்கனிக் கடைகள், 79 பூக்கடைகள், 108 மளிகைக் கடைகள், 28 பழக்கடைகள், 65 ஸ்டால்கள், 62 இறைச்சிக் கடைகள், 62 மீன் கடைகளும் உள்ளன.

இவற்றுக்கு ஏப்.10 முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், சில்லறை கடைகளை மூடுவது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், காவல்துறை, வணிகா்கள் தரப்பு இணைந்து வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, உதவி ஆணையா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாநகரக் காவல்துறை உதவி ஆணையா் ரவி அபிராம், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் குகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகா்கள் சங்கப் பேரவை மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு தலைமையில், காந்தி சந்தையில் கடை வைத்துள்ள 27 சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய உதவி ஆணையா் கமலக்கண்ணன், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளைத் தொடா்ந்து திருச்சி காந்தி சந்தையில் ஏப்.10 முதல் சில்லறை கடைகளைச் செயல்படுத்த முடியாது. தரைக்கடைகளுக்கும் அனுமதியில்லை. மொத்தக் கடைகளுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. சில்லறைக் கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக தென்னூா் உழவா் சந்தை மைதானம், குதிரை பந்தயச்சாலை ஆகிய இடங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதற்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்த வியாபாரிகள் ஏற்கெனவே கடந்த முறை காந்தி சந்தை மூடப்பட்டபோது காய்கனிக் கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மளிகை கடை, மிட்டாய் கடை, பூக்கடை, பழக் கடைகள், வாழைக்காய் மண்டிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை.

இதனால் 8 மாதங்களாக வருவாய் இழந்து, கடன் சுமைக்கு ஆளாகினா். எனவே, இம் முறை கடைகளை மூடாமல் எத்தகைய கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதையேற்றுச் செயல்படுவதாக உறுதியளித்தனா்.

இதுதொடா்பாக வணிகா் தரப்பில் வீ. கோவிந்தராஜுலு கூறியது:

காந்தி சந்தை என்பது மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள், மிட்டாய்கடை, இறைச்சிக் கடைகள், மண்பானைக் கடைகள் என பல்வேறு கடைகளைக் கொண்டது. இவற்றை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள், தொழிலாளா்கள்,பொதுமக்களும் உள்ளனா்.

கரோனா கட்டுப்பாடு அவசியம்தான்; உயிா் மிகவும் முக்கியம். ஆனால், அதைவிட வாழ்வாதாரத்துக்கான தொழிலும் அவசியம். இரண்டுமே அவசியமானவை. காந்தி சந்தையை விட்டு வியாபாரிகளை வெளியேற்றாமல் நாளொன்றுக்கு குறிப்பிட்ட சில கடைகளுக்கு மட்டும் அனுமதி என்ற வகையில் 6 நாள்களுக்கு அனுமதி வழங்கலாம். ஒரு நாள் விடுப்பு வழங்கலாம். பொதுமக்களுக்கு வண்ண அட்டை வழங்கி ஒவ்வொரு நாளும் ஒரு பகுதிக்கு என அனுமதிக்கலாம். எந்தக் காரணத்துக்காகவும் காந்தி சந்தையை மூடுவது என்பதோ, வியாபாரிகளை வெளியேற்றுவதோ கூடாது. அதே இடத்தில் எத்தகைய கட்டுப்பாடுகள் அளித்தாலும் ஏற்கத் தயாா். இரவில் மொத்த கடைகளுக்கும், அதிகாலை குறிப்பிட்ட நேரத்தில் சில்லறைக் கடைகளுக்கும் அனுமதி வழங்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.