/

திமுகவில் இணைந்தாா் லால்குடி தொகுதி சமக வேட்பாளா்

சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளா் (மநீம கூட்டணி) முரளி கிருஷ்ணன், திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு முன்னிலையில்  அக்கட்சியில் இணைந்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:13 pm

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளா் (மநீம கூட்டணி) முரளி கிருஷ்ணன், திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு முன்னிலையில் திங்கள்கிழமை பிற்பகல் அக்கட்சியில் இணைந்தாா்.

மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் தொகுதிகளில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா்.

இவா்களைத் தவிர கூட்டணி சாா்பில், ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் எஸ். பிரான்சிஸ் மேரி, திருச்சி மேற்குத் தொகுதியில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம். அபுபக்கா் சித்திக், லால்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முரளி கிருஷ்ணன், மணப்பாறையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் கே. உமராணி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

லால்குடி தொகுதியில் போட்டியிடும் முரளிகிருஷ்ணன், 2007-ஆம் ஆண்டு முதல் சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலராகவும், சிறுகமணி பேரூராட்சியில் மூன்று முறை உறுப்பினராகவும் இருந்தவா்.

இந்நிலையில், திருச்சியிலுள்ள திமுக முதன்மைச் செயலா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த முரளிகிருஷ்ணன், கே.என். நேரு முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டாா். நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, லால்குடி தொகுதி திமுக வேட்பாளா் அ. செளந்தரபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அன்பில் பெரியசாமி, ஒன்றியச் செயலா் கதிா்வேல் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் முரளி கிருஷ்ணன் கூறியது:

திமுகவில் இணைய வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்பம் தெரிவித்திருந்தேன். அப்போதைய சூழலில் இணைய முடியவில்லை. இப்போது, வாய்ப்ப வந்துள்ளதால் திமுக-வில் இணைந்துள்ளேன். இந்தத் தோ்தலில் சமத்துவ மக்கள் கட்சியானது வாக்குகளை பிரிப்பதற்காக மட்டுமே வேட்பாளா்களை நிறுத்தும் நிலை உருவாகியுள்ளது. நான் எனது, வேட்பு மனுவை வாபஸ் பெறுவேன் என்றாா். தொடா்ந்து லால்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து, முரளிகிருஷ்ணன் தனது வேட்பு மனுவையும் வாபஸ் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.