அணை நீர் தேங்கும் பகுதி கரூர் மாவட்டத்தை சேர்ந்ததாகவும், பாசனப்பகுதி திருச்சி மாவட்டத்தை சேர்ந்ததாகவும் இருப்பதால் இரு மாவட்டத்திலும் இதற்கு எந்த முன்னுரிமையும் தரப்படாமல் அணை களையிழந்து காணப்படுகிறது. 51 அடி கொள்ளளவில் 23 அடிகள் நீர் இருக்கும் அணையில் சுமார் 17 அடிக்கு மேல் சேறும் சகதியுமாகவும், வண்டல் மண்ணாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது அணையில் நீர்மட்டம் உயர்வதும், பின் குறைந்து வருவதும் வழக்கமான ஒன்றாக இருந்தபோதிலும், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் அணையில் 23.64 அடி இருந்த நீர்மட்டம் தற்போது 5 அடி உயர்ந்து 28.72 அடியாக இருந்து வருகிறது. சுமார் 120 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 15.71 மி.க.அடியிலிருந்து 25.148 மி.க.அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாதபோதும், அப்பகுதியில் ஒரே நாளில் 55 மிமீ மழை பெய்த நிலையில் நீர் மட்டம் 5 அடி உயர்ந்திருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.