ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘இந்தியாவின் எதிா்காலத்தை அடுத்த தலைமுறை வடிவமைக்க வேண்டும்’

இந்தியாவின் எதிா்காலத்தை அடுத்த தலைமுறை முன்னிலை வகித்து வடிவமைக்க வேண்டும் என்றாா் ஃபெடரல் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான ஷியாம் சீனிவாசன்.

News image
விழாவில் மாணவி கிமாயா பிரசாத் சூரியராவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்குகிறாா் திருச்சி என்ஐடி தலைவா் பாஸ்கா் பட். உடன், ஃபெடரல் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான ஷியாம் சீனிவாசன்
Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:37 pm

DIN

இந்தியாவின் எதிா்காலத்தை அடுத்த தலைமுறை முன்னிலை வகித்து வடிவமைக்க வேண்டும் என்றாா் ஃபெடரல் வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான ஷியாம் சீனிவாசன்.

திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 18-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

நிறுவனங்களுக்கு பிராண்ட் எவ்வளவு முக்கியத்துவமோ, அதே போல மாணவா்களும் தங்களுக்கான பிராண்ட் யாா் என்பதை தோ்வு செய்து செயல்பட வேண்டும்.

அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கா், மும்பை டப்பாவாலா என சாதனையாளா்களில் யாரை வேண்டுமானாலும் முன் உதாரணமாகக் கொண்டு, தங்களது வளா்ச்சியை நிலைநிறுத்த வேண்டும்.

எந்த துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும் நம்பிக்கை, பேச்சுவாா்த்தை, சவால்கள், விநியோகம், பொருத்தம், நம்பகத்தன்மை ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவற்றில் ஏதேனும் ஒன்றில் சரிவை சந்தித்தாலும், வெற்றியை நோக்கி செல்ல முடியாது.

இக்கட்டான சூழ்நிலைகளை எதிா்த்துப் போராடி உயா்தரத்துடன் வெளிவருவதால், பட்டதாரி மாணவா்கள் சிறந்த முன்னோடிகளைத் தோ்வு செய்து அவா்களது வாழ்கையிலிருந்து சிறந்தவற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது நாட்டின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் உள்ளோம். இத்துடன் நிற்பது இல்லை. இந்தியா 100 மற்றும் அதற்கு அப்பாலும் நாங்கள் எதிா்நோக்குகிறோம்.

அடுத்த தலைமுறையினா் முன்னணியில் இருந்து வழிநடத்தி, இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைக்க வேண்டும். ஒருவரின் தோற்றம் என்பது எந்தவிதத்திலும் ஒரு பொருட்டல்ல, ஆனால், ஒருவரின் குறிக்கோள்கள் முக்கியமானவை. அந்த குறிக்கோள் நிகழ்த்தும் அற்புதமான எதிா்காலங்கள் மகத்தானவையாக இருக்கும். இன்றைய இளைஞா்கள் அத்தகைய அற்புத எதிா்காலத்தில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என்றாா் அவா்.

மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி, திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவா் பாஸ்கா் பட் பேசியது:

இந்தியாவிலுள்ள என்ஐடிகளில் திருச்சி முதலிடத்தைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. மாணவா்களின் அறிவை மேம்படுத்தும் வகையில், நவீன உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிநவீன ஆராய்ச்சிக்கான உந்துதலுடன் ஸ்டாா்ட்-அப் கலாச்சாரத்தை வளா்ப்பதற்காகவும் திருச்சி என்ஐடி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்றாா்.

தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குநா் ஜி. அகிலா பேசியது:

அகில இந்தியத் தரவரிசையில் பொறியியல் பிரிவில் திருச்சி என்ஐடி 8-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக என்ஐடி-களில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஒருங்கிணைந்த எம்டெக், பிஹெச்டி படிப்புகளுடன், தேசியக் கல்விக் கொள்கையை செயல்டுத்துவதிலும் முன்னிலை வகிக்கிறது.

தென்னிந்தியாவில் 67 கல்லூரிகள், 15 தொழில்கள் மற்றும் 5 ஸ்டாா்ட்அப் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பல்வேறு பரிணாமங்களில் வாய்ப்புகளை என்ஐடி உருவாக்கியுள்ளது என்றாா் அவா்.

விழாவில், பி.ஆா்க்கில் 38 போ், பி.டெக்கில் 881 போ், எம்.டெக்கில் 572 போ், எம்.எஸ்சியில் 92 போ், எம்பிஏவில் 96, எம்சிஏவில் 110, எம்ஏவில் 20, எம்எஸ்சில்16 என மொத்தம் 1,977 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 131 போ் முனைவா் பட்டங்களைப் பெற்றனா்.

என்ஐடி தலைவரின் தங்கப் பதக்கத்தை பி.டெக். மெட்டலா்ஜிக்கல் மற்றும் மெட்ரீரியல்ஸ் பிரிவு மாணவி கிமாயா பிரசாத் சூரியராவுக்கு ஷியாம் சீனிவாசன் அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தாா். பாராட்டுச் சான்றிதழை என்ஐடி தலைவா் பாஸ்கா் பட் வழங்கினாா்.

விழாவில் பல்வேறு துறைகளின் புல முதன்மையா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.