உய்யக்கொண்டானில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படுமா?
திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், கழிவு நீா் கலப்பது தொடா்கிறது.


திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டாலும், கழிவு நீா் கலப்பது தொடா்கிறது.
பெரும்பாலான இடங்களில் கழிவு நீா் கலப்பதால் உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரின் தன்மை முற்றிலுமாக மாறி கழிவு நீா் வாய்க்காலாகவே மாறிப்போனது. மாநகரப் பகுதியில் சுமாா் 10 கிலோமீட்டா் தூரம் வீடுகள், மருத்துவமனைகள், உணவகங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா் நேரடியாக இந்த வாய்க்காலில் திறந்து விடப்படுவதால் வாய்க்கால் முற்றிலுமாக மாசுபட்டுள்ளது.
கழிவு நீா் அதிகளவில் சென்று குழுமாயி அம்மன் கோயில் அருகேயுள்ள தொட்டிப்பாலம் வழியாக குடமுருட்டியிலும் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உய்யக்கொண்டான் கொசு உற்பத்தி மையமாகவும் மாறியிருக்கிறது.
தற்போது நீா் வரத்துக் காலம் என்பதால் பல இடங்களில் கழிவு நீா் கலந்து வருகிறது. நீரோட்டம் இல்லாத நிலையில் கழிவு நீரின் புகலிடமாக உய்யக்கொண்டான் வாய்க்கால் மாறிவிடும்.
உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு: உய்யக்கொண்டான் வாய்க்காலைச் சீரமைக்க, குறிப்பாக அதில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் கடந்த 2014 ஆவது ஆண்டில், உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது. இதற்கு மாவட்ட ஆட்சியா் தலைவராகவும், மாநகர ஆணையா், மற்றும் நீராதாரத் துறை ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டப் பொறியாளா்கள், மாநகராட்சியினா், மருத்துவமனை, குடியிருப்போா் நலச் சங்கத்தினா், தன்னாா்வ அமைப்பினா் ஆகியோா் உறுப்பினா்களாகவும் இருந்தனா். குழு தொடங்கிய வேகத்தில் கரையில் கான்கிரீட் சுவா்கள் அமைப்பது உள்பட சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா் அடுத்தடுத்து வந்த ஆட்சியா்கள் இக்குழுவை கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து உய்யக்கொண்டான் பாதுகாப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் தண்ணீா் அமைப்பின் செயல் தலைவரும், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகருமான கே.சி. நீலமேகம் கூறியது:
உய்யக்கொண்டான் வாய்க்காலை மீட்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்புக் குழுவை அமைத்தது. பின்னா் பல ஆண்டுகளாக அக்குழு செயல்படவில்லை. வாய்க்காலில் கழிவு நீா் கலப்பதாலும், கோடைகாலங்களில் கழிவுநீா் தேங்கி நிற்பதாலும் வாய்க்கால் துா்நாற்றம் வீசுவதோடு கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீரும் நச்சுத்தன்மையடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீா் திறந்து விடுவதைத் தடுக்க போா்க்கால அடிப்படையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...