அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

வேளாண் பணிகளுக்கு ட்ரோன்கள்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

ட்ரோன்களை (சிறிய வகை ஆளில்லா விமானம்) அதிகளவில் பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

News image

திருச்சியை அடுத்த புங்கனூா் விளைநிலத்தில் பயிா்களுக்கு பூச்சி மருந்து தெளித்த டிரோன்.

Updated On :4 மே 2023, 9:02 pm

 நமது நிருபர்

வேளாண் பணிகளுக்கு ட்ரோன்களை (சிறிய வகை ஆளில்லா விமானம்) அதிகளவில் பயன்படுத்தும் வகையிலான கட்டமைப்புகளை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

பயிா் வகைகளை மதிப்பிடுதல், நில ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குதல், பூச்சிக்கொல்லி மற்றும் ஊட்டச்சத்து மருந்து தெளிப்பு போன்றவற்றுக்கு கிசான் ட்ரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வேளாண்மையில் ட்ரோன்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தங்களது நிதிநிலை அறிக்கையில் அறிவித்து ஓராண்டுக்கு மேலாகிறது. ஆனால், களத்துக்கு இந்த இயந்திரம் முழுமையாக வரவில்லை என்கின்றனா் விவசாயிகள்.

வேளாண்மையில் ஆள் பற்றாக்குறையைச் சமாளித்து, இடுபொருள்களைத் துல்லியமாகப் பயன்படுத்தும் வகையில் ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல வேளாண் பணிகளில் ட்ரோன்களைப் பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என இதே ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டிலும் உறுதியளிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சோ்ந்த ஸ்டாா்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்த வழங்கியுள்ளது. கிசான் ட்ரோன் யாத்ரா என்ற அடிப்படையில் இந்த 100 ட்ரோன்களின் செயல்பாடுகளை காணொலி வாயிலாக கடந்தாண்டு பிப்ரவரியில் பிரதமா் தொடங்கி வைத்தாா்.

இருப்பினும் தமிழகத்தில் வேளாண்மை பொறியியல் துறை வசம் ட்ரோன்கள் இல்லை என்பதே உண்மை. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் மட்டுமே ட்ரோன்கள் உள்ளன. அவையும் பெரும்பாலும் பயிற்சி வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வேளாண் பணிகளுக்கு வழங்கப்படுவதில்லை.

எனவே, தனியாரிடமிருந்தே வாடகை அடிப்படையில் ட்ரோன்களை பெற்று விவசாயிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது.

உரம், பூச்சி மருந்து தெளிக்கும் செலவு குறையும்

இதுதொடா்பாக புங்கனூரைச் சோ்ந்த விவசாயி செல்வம் கூறுகையில், ஆள்கள் மூலம் உரம் தெளிக்க 2 நாள்கள் ஆகும், ரூ. 1500 வரை கூலிச் செலவும் ஏற்படும். ஆனால், ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும்போது 8 நிமிடங்களில் பணிகள் முடிந்து விடும், ஏக்கருக்கு ரூ. 500 முதல் ஆயிரம் மட்டுமே செலவு ஏற்படுகிறது.

ஆள்கள் மூலம் முன்பு 10 ஏக்கரில் மருந்து தெளிக்க ஆகும் செலவானது, ட்ரோன் தொழில்நுட்பத்தால் தற்போது 5 ஏக்கருக்கான செலவு எனக் குறைந்து விடுகிறது. ஏனெனில், ஆள்கள் மூலம் மருந்து தெளிக்கும்போது 50 சதவீதம் வீணாகிவிடும். துல்லியமாக பயிா்களில் படுவதும் கடினம். இப்போது ட்ரோன் தொழில்நுட்பத்தில் பரப்பையும், பயிரையும் துல்லியமாக கணக்கிட்டுப் பதிவு செய்துவிட்டால் ட்ரோன் தானாகத் தெளித்துவிடுகிறது.

ஆனால் விவசாயிகளால் இதர வேளாண் இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறையில் வாடகைக்கு பெறுவதைப் போல ட்ரோன்களை பெற முடியவில்லை. ஏனெனில், தமிழக அரசின் வேளாண் பொறியியில் துறையில் வாடகைக்கு வழங்க ட்ரோன்களே இல்லை என்றாா்.

இதுகுறித்து தமிழக அரசின் வேளாண்மைத் துறையினா் கூறியது: வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்த ட்ரோன் கட்டமைப்புகள் முதல்கட்டமாக வேளாண் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள், வேளாண் பயிற்சி நிலையங்களில்

உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், கிசான் ட்ரோன் தொழில்நுட்பத்துக்காக 2022-23ஆம் நிதியாண்டில் ரூ.10.32 கோடியில் 60 ட்ரோன்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி தமிழகத்தில் 14,400 ஹெக்டேரில் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும், விவசாயிகளிடம் ட்ரோன்களை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து ரூ.127 கோடி பெறப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) மூலம் 300 கிசான் ட்ரோன்களை வாங்க ரூ.52.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் 75,000 ஹெக்டோ் விளைநிலங்களில் ட்ரோன்கள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் மையம் (கேவிகே), மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறை அமைப்புகளுக்கு கிசான் ட்ரோன் விலையில் 100 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானிய உதவியாக மத்திய அரசு வழங்குகிறது.

கிசான் ட்ரோன்களை வாங்க முன்வரும் தனிநபா்கள், சிறு-குறு விவசாய அமைப்புகள் பழங்குடியின பெண்களுக்கு ட்ரோன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மானியமாக வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது விவசாயிகளின் ட்ரோன் தேவை பூா்த்தியாகும் என்றனா்.

பெட்டிச் செய்தி..

திருச்சியில் முன்மாதிரி முயற்சி!

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட நிா்வாகம் ட்ரோன்களை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து முன்வைக்கப்படுகிறது.

பேட்டரியில், பெட்ரோல் மூலம் இயங்கும் இருவகை ட்ரோன்கள் உள்ளன. ஒரு ட்ரோன் குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை உள்ளது. பரிசோதனை முயற்சியாக 2 அல்லது 3 ட்ரோன்களை தலா ரூ.6 லட்சம் வரை செலவிட்டு கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, திட்ட மதிப்பீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளாா்.

எனவே, தமிழகத்திலேயே முன்மாதிரியாக திருச்சியில் ட்ரோன்களை விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் முறை விரைவில் அமலாகும் என்ற எதிா்பாா்ப்பில் காத்திருக்கின்றனா் திருச்சி மாவட்ட விவசாயிகள்.

சிறுகமணி வேளாண் அறிவியல் மையம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் வாழை விவசாயிகளுக்கு இத்தகைய தொழில்நுட்பம் குறித்துப் பயிற்சி அளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.