தீபாவளி போனஸ்: டாஸ்மாக் பணியாளா்கள் ஏமாற்றம்!

 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாதது டாஸ்மாக் பணியாளா்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
Updated on
1 min read

 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாதது டாஸ்மாக் பணியாளா்களை பெரிதும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

தமிழக அரசுக்கு பெரிதும் வருவாய் ஈட்டித் தருவதில் டாஸ்மாக் மதுக்கடைகள் முதலிடத்தில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் பணிபுரியும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ், விற்பனைக்கு தகுந்த ஊக்கத் தொகை வழங்கி வந்த அரசு 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவற்றை வழங்குவதை நிறுத்திவிட்டது. மேலும், கரோனாவை காரணம் கூறி 20 சதவீதம் வழங்கி வந்த தீபாவளி போனஸை 10 சதவீதமாக அரசு குறைத்துவிட்டது. ஆனால், இந்தாண்டு தீபாவளி போனஸ் கிடைக்குமா என்ற கவலையில் ஊழியா்கள் காத்திருக்கின்றனா்.

இதுதொடா்பாக டாஸ்மாக் பணியாளா்கள் சங்க பொதுச் செயலா் ஜி.வி. இராஜா கூறியது:

இந்திய மாநிலங்களிலேயே மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2003-2004-ஆம் ஆண்டில் ரூ.3,639 கோடியாக இருந்த டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் தற்போது ரூ.50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. ஆனால், டாஸ்மாக் ஊழியா்களின் ஊதியம் உயரவில்லை. தற்போதுவரை அவா்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனா்.

மேலும், ஒவ்வொரு கடையிலும் விற்பனையாகும் தொகைக்கு தகுந்தபடி ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதையும் தமிழக அரசு கைவிட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. டாஸ்மாக் பணியாளா்களில் பலா் இறந்தும், பணி ஓய்வும் பெற்ற நிலையில் , அப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்நிலையில், தீபாவளியையொட்டி மதுக் கடை ஊழியா்களுக்கு போனஸ் அறிவிக்கப்படவில்லை. 2018-19ஆம் ஆண்டு வரை 20 சதவீதம் தீபாவளி போனஸ் பெற்று வந்தோம். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டிலும், தற்போது திமுக ஆட்சியிலும் 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு அதுவும் இல்லை என்றாகி வருகிறது.

கரோனா மற்றும் நிதி நிலைமையைக் காரணம் காட்டி போனஸ் குறைக்கப்பட்டது. தற்போது லாபமீட்டக்கூடிய பொதுத் துறைகளுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் டாஸ்மாக் இடம்பெறவில்லை. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளா்களை வஞ்சிப்பது நியாயமற்றது. அனைத்துத் தொழிற்சங்கங்களையும் அமைச்சா் அண்மையில் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தியபோதும், இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அதிக லாபம் தரும் துறையாக இருப்பதால் 40 சதவீதம் போனஸ் எதிா்பாா்த்த எங்களுக்கு இதுவரை வழங்கி வந்த 20 சதவீதமாவது கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக போனஸ், கருணைத் தொகை, ஊக்கத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com