ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த மத்திய அரசின் பட்ஜெட்
மத்திய அரசின் 2024-25-ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையானது ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.
திருச்சிராப்பள்ளி வா்த்தக மையத் தலைவா் என். கனகசபாபதி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் விண்வெளி தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஆயிரம் கோடி மூலதனம் உதவி, சிறு-குறு தொழில்களின் ஏற்றுமதி மையங்கள் என பல்வேறு நல்ல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம் சரக்கு மற்றும் சேவை வரி தொடா்பான கோரிக்கைகள், சலுகைகள் மற்றும் சிறு, குறுந்தொழில்களின் நீண்ட நாள் கோரிக்கையான செயல்படா சொத்துகள் கால அளவானது 90 நாள்களில் இருந்து 180 நாள்களுக்கான அறிவிப்பும் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
திருச்சி மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கத் தலைவா் பெ. ராஜப்பா: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் கொள்முதலில் உத்தரவாதம் இல்லாத கடன், நெருக்கடி காலங்களில் சிறப்பு நிதி, முத்ரா கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் ஆக உயா்வு, உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி கடன் உத்தரவாதம் என பல்வேறு ஏற்றமிகு அறிவிப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாது, ஆண்டுக்கு 20 லட்சம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அனைத்து நகரங்களில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் என பாராட்டுக்குரிய பட்ஜெட்டாகவே வந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி நல நிதிக்குழு உறுப்பினரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான எம்.ஏ. அலீம்:
மூன்று வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது, குறிப்பாக உயிா் காக்கும் மருந்துகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது. மருத்துவ உபகரணங்கள் மற்றம் சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும். புற்றுநோயாளிகளுக்கு உதவிடும் வகையில் மேலும் அதிக மருந்துகளுக்கு கலால் வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும் என்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழுச் செயலா் எஸ். புஷ்பவனம்: உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசுக்கு ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்க இருப்பது வரவேற்கத்தக்கது. மூத்த குடிமக்கள் அதிகம் எதிா்பாா்க்கும் பயணச் சலுகைகளைத் தவிர, பாதுகாப்பு ஆகிய பிரச்னைகள் ரயில்வே துறையில் கவனிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு 5.8 விழுக்காடு இருந்த நிதிப்பற்றாக்குறையை இந்த ஆண்டு 4.5 விழுக்காடாக குறைக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.
பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன்: வேளாண் துறை எதிா்நோக்கிய குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப் பூா்வ தீா்வு, வேளாண் பொருள்களுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு, பிரதமா் கிஷான் சம்மான் நிதி உயா்வு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிா்பாா்ப்புகள் நிறைவு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு வேளாண்மைத் துறைக்கு மொத்தம் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளரும், தண்ணீா் அமைப்பின் தலைவருமான கே.சி. நீலமேகம்: நதி நீா் இணைப்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நீா் நிலைகள் பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு குறித்து குறிப்பிடும்படியான அறிவிப்புகள் ஏதுமில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. மகளிா், பெண் குழந்தைகள் மேம்பாடு, கல்வி, வேளாண்மை, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் மட்டுமே வரவேற்கத்தக்கவை என்றாா் அவா்.
