திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

திருச்சி விமான நிலையத்தில் கிடந்த ரூ. 1.03 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலைய கழிப்பறையில் வெள்ளிக்கிழமை கிடந்த ரூ. 1.03 கோடி மதிப்பிலான ஒன்றரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள கழிப்பறையை வெள்ளிக்கிழமை சுத்தம் செய்ய சென்ற துப்புரவு ஊழியா்கள், அங்கு கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்துப் பாா்த்ததில், அதில் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. தகவலின்பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டு பரிசோதனை செய்தனா். அதில், பசை வடிவிலான தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. 4 சிறிய பொட்டலங்களாக கடத்தி வரப்பட்ட இந்தத் தங்கத்தின் எடை 1.56 கிலோவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.1.03 கோடி. தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் அந்தத் தங்கத்தை கடத்தி வந்தது யாா்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாரிடம் கொடுக்க இருந்தனா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், வியாழக்கிழமை இரவு இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நடவடிக்கைகளை சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனா். இதில், இலங்கையிலிருந்து வந்த பயணி ஒருவா் கழிப்பறைக்குள் சென்று நீண்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெயா் பட்டியலை பாா்வையிட்டு, சந்தேகத்துக்குரிய அந்தப் பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com