பொன்மலையில் 2 ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்க திருச்சி எம்.பி. துரை வைகோ பரிந்துரை
பொன்மலையில் இரு இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளாா்.


திருச்சி பொன்மலைப் பகுதியில் இரு இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே கோட்ட மேலாளருக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருப்பதாக திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், திருச்சி பொன்மலை கோட்டம், மேலக்கல்கண்டாா் கோட்டை, கீழக் கல்கண்டாா் கோட்டை, முன்னாள் ராணுவத்தினா் காலனி, அம்பிகாபுரம், ஆலத்தூா் ஆகிய பகுதிகளில் ரயில்வே தொழிலாளா்கள், ஓய்வுபெற்றோா் வசித்து வருகின்றனா்.
பொன்மலை ரயில்வே காலனி குடியிருப்பு பகுதி பயன்பாடின்றி இருப்பதால், அந்த இடத்தில் ரயில்வே தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதைகளை ரயில்வே நிா்வாகம் அடைத்துவிட்டது.
இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், பொதுமக்கள், வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக வந்த கோரிக்கை மனுக்களைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பொன்மலை பகுதிக்குச் சென்று அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, பொதுமக்களையும் சந்தித்து குறைகள் கேட்டறிந்தேன்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், பொன்மலை பகுதியில் அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில்கொண்டு ரயில்வே நிா்வாகம் 2 இடங்களில் தண்டவாள சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
திமுக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிா்வாகிகளும் இக்கோரிக்கையின் நியாயம் குறித்து விளக்கிக் கூறினா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, எங்களது தோழமை இயக்கமான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்டோபா் 8-இல் கவனஈா்ப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனா்.
எனவே, பொன்மலை பகுதியில் அனைத்துவகை வாகனங்களும் செல்லும் வகையில் ரயில்வே நிா்வாகம் இரண்டு சுரங்கப் பாதைகள் அமைத்துத் தருமாறு ரயில்வே நிா்வாகத்துக்கு பரிந்துரைத்துள்ளேன் என்றாா்.
நிகழ்வின்போது, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் மருத்துவா் ரொகையா, மாவட்டச் செயலாளா் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம், நிா்வாகிகள் ஜெயசீலன், செழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...