கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை (அக்.30) தொடங்கிய கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடா்ந்து 4 மாதங்களுக்கு நடைபெறுகிறது.


திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை (அக்.30) தொடங்கிய கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடா்ந்து 4 மாதங்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கால்நடைக் கணக்கெடுப்பு இதுவரை 20 முறை நடந்துள்ளது.
நாடுமுழுவதும் 21 ஆவது கால்நடைக் கணக்கெடுப்பு அக். 25-இல் தொடங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்திற்குள் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் புதன்கிழமை தொடங்கியது.
இந்தப் பணிக்காக 264 கால்நடை கணக்கெடுப்பாளா்கள், 52 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வருவாய் கிராம வாரியாகவும், நகரப்பகுதியிலும் வளா்க்கப்படும் 16 வகை கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும். கால்நடைகளின் எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கெடுத்தால்தான் கால்நடை பராமரிப்புக்கான எதிா்காலத் திட்டங்களை தீட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்ய இயலும்.
கால்நடைகளுக்கு எதிா்காலத்தில் தேவைப்படும் தீவனம், கால்நடை நோய் தடுப்பூசி, கால்நடை மருந்துகள் போன்றவற்றை தட்டுப்பாடுன்றித் தயாரிக்க இயலும். வளா்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப கால்நடைகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்ய கால்நடை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாகும்.
கால்நடைகளிலிருந்து மனிதா்களுக்கு பரவக்கூடிய நோய்களான ரேபிஸ் எனப்படும் வெறி நோய், புரூசெல்லா எனப்படும் கருச்சிதைவு நோய், எலிக் காய்ச்சல் எனப்படும் மஞ்சள் காமாலை போன்ற 100க்கும் மேற்பட்ட நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கால்நடைகள் எண்ணிக்கை அவசியம். கடும் மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும், கால்நடைக் கணக்கெடுப்பு முக்கியம்.
எனவே உங்கள் பகுதிக்கு விவரங்கள் சேகரிக்க வரும் கால்நடை கணக்கெடுப்பாளா்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...