திருச்சி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு நவீன பரிசோதனை
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதன்முதலாக கா்ப்பிணிப் பெண்ணுக்கு அம்னியோசென்டீசிஸ் என்ற நவீன பரிசோதனை வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை, மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவத் துறைகள் இணைந்து 21 வார கா்ப்ப காலத்தில் இருந்த 35 வயதுடைய கா்ப்பிணிப் பெண்ணுக்கு இந்தப் பரிசோதனையை மேற்கொண்டன. பரிசோதனையின் முடிவில் கருவில் மூக்கெலும்பு இல்லாமை, டவுன் சின்ட்ரோம் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
தனியாா் மருத்துவமனைகளில் சுமாா் ரூ. 40 ஆயிரம் வரை செலவாகும் இந்தப் பரிசோதனை, அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உயா் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன.
சிக்கலான இந்தப் பரிசோதனையானது மருத்துவமனையின் முதன்மையா் எஸ். குமரவேலின் வழிகாட்டுதலின்படி, மருத்துவமனையின் மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.
கா்ப்பிணி வயிற்றுக்குள் இருக்கும் சிசுவின் தற்போதைய நிலையை முழுமையாக அறிந்து, பிறவிக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், அதை முன்கூட்டியே அறியவும், குறைபாட்டைச் சரிசெய்யவும், அல்லது குழந்தை பிறப்பைத் தடுக்கவும் இந்தப் பரிசோதனை உதவுகிறது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
