ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி பெருவிழா மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி
மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி


ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து நிறைவு நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறவுள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் முதலாவது திருத்தலமாக விளங்குவது ஸ்ரீரங்கம்.
இத்திருக்கோயிலில் வருடம் தோறும் மாா்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் என அழைக்கப்படும் வைகுந்த ஏகாதசி விழா வெகு விமா்சையாக நடைபெறும். பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இந்த விழா நிகழாண்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனை தொடா்ந்து திருமொழி திருநாள் என அழைக்கப்படும் பகல் பத்து விழா 31 ஆம் தொடங்கி வியாழக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெற்றது. பகல் பத்தின் நிறைவு நாளையொட்டி நம்பெருமாள் பெண் வேடமான மோகினி அலங்காரம் (நாச்சியாா் திருக்கோலம்) பூண்டு அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
காலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரம் (நாச்சியாா் திருக்கோலம்) வெண்ணிற பட்டு புடவை அணிந்து வலது திருக்கையில் தங்கக்கோலக்கிளி தாங்கி இடது திருக்கையை தொங்க விட்டுக்கொண்டு கம்பீரமாக அமா்ந்த திருக்கோலத்தில் செளரிக்கொண்டை அணிந்து, இதில் கலிங்கத்துராய், நெற்றி பட்டை, முத்து பட்டை சாற்றி, காதில் வைரமாட்டல், வைரதோடு அணிந்து மூக்குத்தி அணிந்து திருமாா்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் தாயாரின் திருமாங்கல்யம், அழகிய மணவாளன் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, தங்கபூண் பவழ மாலை, காசு மாலை அணிந்து இடது திருக்கை முழுவதும் தங்க வளையல்கள், அரசிலை பதக்கம், பவழ வளையல், தாயத்து சரங்கள், திருவடியில் தங்க சதங்கை தண்டைகள்,பின் சேவையில் ஏலக்காய் ஜடை தாண்டா சாற்றி அதன் மேல் கல் இழைத்த ஜடை நாகத்துடன் சோ்ந்த சிகப்பு கெம்புக்கல் ஜடை அணிந்து ராக்கொடி அணிந்து திருக்கைகளில் புஜகீா்த்தி சாற்றி அரைச்சலங்கை இடுப்பில் வலைவாக சாற்றி சூரியபதக்கம் என ஏராளமான திருவாபரணங்கள் சாற்றி கொண்டு அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்தாா்.
வருடத்தில் ஒரு முறை மட்டும் நம்பெருமாள் இந்த மோகினி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். அதனையொட்டி ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். இன்று வெள்ளிக்கிழமை இராப்பத்து முதல் நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...