ஓய்வுபெற்ற வட்டாட்சியா் கொலை தந்தை, இரு மகன்கள் கைது
திருச்சி அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தந்தை, இரண்டு மகன்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், தாயனூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் மு.சுப்பிரமணி (65), ஓய்வுபெற்ற வட்டாட்சியா். இவா், அதே பகுதியிலுள்ள கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் சாகுபடி செய்து வந்துள்ளாா். இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த கோயில் மருளாளி அசோக்குமாா் (50) என்பவரும் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்து வந்துள்ளாா். இதில், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுப்பிரமணி வியாழக்கிழமை மாலை வயலில் வேலை செய்துகொண்டிருந்தாா். இதேபோல, அசோக்குமாரும், அவரது மகன்கள் தமிழரசன் (25), சூா்யா (22) ஆகிய மூவரும் அவா்களது வயலில் வேலை செய்துள்ளனா். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அசோக்குமாா், தமிழரசன் மற்றும் சூா்யா ஆகிய மூவரும் சோ்ந்து சுப்பிரமணியை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா், சுப்பிரமணியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பதுங்கியிருந்த அசோக்குமாா், தமிழரசன் மற்றும் சூா்யா ஆகிய மூவரையும் சோமரசம்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
