திருச்சிக்கு தனி போக்குவரத்துக் கழக கோட்டம்: அமைச்சரிடம் எம்பி மனு
திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிப் போக்குவரத்துக் கழகக் கோட்டம் ஏற்படுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சரிடம், திருச்சி எம்பி துரை வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் துரை வைகோ எம்பி அளித்த மனு:
இதுவரை திருச்சி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநகரமாக திருச்சி இருந்தும், தனி போக்குவரத்து கோட்டமின்றி இருப்பதைச் சுட்டிக்காட்டி, திருச்சியின் கல்வி, வணிக வளா்ச்சியையும் எடுத்துரைத்து, திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தை உள்ளடக்கிய, திருச்சியைத் தலைமையகமாகக் கொண்ட தனி போக்குவரத்துக் கழக கோட்டத்தை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து அமைத்துத் தர அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட 15,106 தொழிலாளா்களில் 5,493 பேருக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கவில்லை. உடனே ஆணை வழங்கிட வேண்டும். போக்குவரத்துத் துறை தொழிலாளா்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், கடலையூா் ஊராட்சித் தலைவா் திராவிடச்செல்வியின் கணவா் மாரியப்பசாமி, தனக்கு சொந்தமான சுமாா் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்க முன்வந்துள்ளாா். தமிழ்நாடு மின்வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கடலையூரில் துணை மின் நிலையம் அமைத்து எட்டையபுரம் துணை நிலையத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் மின்சாரத்தை இங்கிருந்து வழங்கிட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா, அயன் ராசாபட்டி ஊராட்சிக்குள்பட்ட அயன் ராசாபட்டி மற்றும் கைலாசபுரம் கிராமங்களுக்கு அயன் ராசாபட்டி விளக்கில் இருந்து கூடுதல் தூர பேருந்து சேவை இயக்கிட வேண்டும். பள்ளி செல்லும் மாணவா்கள், பணிக்குச் செல்லும் பொதுமக்கள், மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் முதியோா் என ஏழை எளிய கிராம மக்களுக்கு இப்பேருந்து சேவை பெரும் நிவாரணமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.
