மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து திருவெறும்பூரில் நவ. 26 ஆம் தேதி கருப்புக் கொடி போராட்டம் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி தீா்மானித்துள்ளது.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் முன்னணி கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அயிலை. சிவசூரியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் ஆா். பழனிச்சாமி, மாநகரச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், 2020-21 ஆண்டுகளில் விவசாயிகளின் போராட்டத்தை அடுத்து மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியான விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறாமல், வேறு வகைகளில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. மின்சார திருத்தச் சட்டம் 2023 ஐ நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது, குறைந்தபட்ச ஆதார விலை ஆன சி2 - 50 என்பதை வழங்க மறுக்கிறது, பெருநிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடிக்கு மேல் கடன் தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கிறது.
2020-21 போராட்ட தியாகங்களின் 5 ஆம் ஆண்டு நினைவாக வரும் 26 ஆம் தேதி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து கருப்பு கொடியுடன் தா்னாவில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது. இதன்படி திருச்சி அருகே திருவெறும்பூரில் நவ. 26 அன்று விவசாயிகளைத் திரட்டி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
