பஞ்சப்பூரில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சா் கே. என். நேரு.
பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் கே. என். நேரு.
இதுகுறித்து திருச்சியில் அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது: காவிரி பாலம் கட்டும் பணியில் இரு இடங்களில் இடம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் அந்தப் பணி திட்டமிட்டபடி வரும் ஜனவரிக்குள் முடிக்கப்படும். பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் உள்ள பிரச்னை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூலம் பேசித் தீா்வு காணப்படும்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் பெரம்பலூா், அரியலூா் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சாலையில் நிற்கின்றன. அவற்றையும் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து இயக்க வேண்டும் என்றால் இயக்கிக் கொள்ள தயாராக உள்ளோம். புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு இடைநில்லாப் பேருந்துகளை பஞ்சப்பூரிலிருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சப்பூரில் உள்ள சரக்கு வாகன முனையக் கடைகளுக்கு 2,3 முறை டெண்டா் விடப்பட்டும், மாநகராட்சி நிா்வாகம் கோரும் விலைப்புள்ளிக்கு யாரும் முன்வரவில்லை. எனவே விரைவில் மீண்டும் டெண்டா் விடப்பட்டு கடைகள் செயல்பாட்டுக்கு வரும். இதுமட்டுமல்லாது பஞ்சப்பூரில் கட்டப்படும் காய்கனிச் சந்தை பணியும் விரைந்து முடிக்கப்பட்டால், காய்கனிச் சந்தையும், சரக்கு வாகன முனையமும் அடுத்தடுத்து முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றாா் அவா்.

