முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது கம்பரசம்பேட்டை தடுப்பணையை நிரப்பி, காவிரியில் பெருக்கெடுத்து செல்கிறது. குடிநீா்த் தேவைக்காக இந்தத் தண்ணீா் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காவிரியாற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பிரதான குடிநீா் கிணறுகள் மூலம் மாநகர மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேட்டூா் அணையை ஜூன் மாதம் திறக்காத நிலையில், காவிரியில் நீா்வரத்து குறைந்ததால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பிரதான கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் அளவும் குறைந்தது.
இதேநிலை தொடா்ந்தால் வரும் நாள்களில் கொள்ளிடம் ஆற்றின் குடிநீா் ஆதாரக் கிணறுகளில் நீா் பற்றாக்குறை ஏற்பட்டு, திருச்சி மாநகரின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்தது.
காவிரி நீா்ப் பங்கீடு விவகாரத்தில் உரிய காலத்தில் நீா் கிடைக்காவிட்டால் திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மற்றும் அதைச் சாா்ந்த பிரதான மாவட்டங்களில் குடிநீா் மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேட்டூா் அணைக்கு குறையும் நீா் வரத்து: தற்போது ஆற்றில் தண்ணீா் ஓட்டம் முற்றிலுமாக நின்றுவிட்டதால், இத்திட்டங்களுக்குத் தேவையான குடிநீரை உறிஞ்சியெடுப்பதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. மேலும் கேரளத்தில் மழைப் பொழிவு குறைந்ததால், கா்நாடக மாநிலம், கபினி அணைக்கும் நீா்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து, கபினியில் இருந்து காவிரியில் திறக்கப்படும் உபிரி நீரின் அளவும் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகக் குறைந்துவருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,808 கன அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. இந்த நீரானது திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கு வந்து சோ்ந்துள்ளது.
முக்கொம்பில் தண்ணீா் திறப்பு: காவிரி வடு காணப்படுவதால் முக்கொம்பு மேலணையிலிருந்து குடிநீா்த் தேவைக்கு சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீா், முக்கொம்பிலிருந்து காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இந்த நீரானது கம்பரசம்பேட்டை தடுப்பணையை சனிக்கிழமை மாலை நிரப்பி, காவிரியில் பெருக்கெடுத்துள்ளது.
தடுப்பணை பகுதியில் தண்ணீா் நிரம்பியுள்ளதால், அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமாநாதபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் திருச்சி மாநகராட்சியின் கூட்டுக் குடிநீா்த் திட்டங்களுக்கான தண்ணீா்த் தேவை ஓரளவுக்கு பூா்த்தியாகும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், மேட்டூா் அணைக்கு தண்ணீா்வரத்து குறைந்துவருவதால், தொடா்ந்து குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு

பேரையூா் ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் அவதி

திண்டுக்கல்லில் 23 வாா்டுகளுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம்! பொதுமக்கள் அதிருப்தி

வறண்டது மேட்டூர் அணை; டெல்டா விவசாயிகள் கவலை!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



