திருச்சியின் முதல் ஆரோக்கிய மற்றும் சுகாதாரமான உணவுத் தெரு (ஃபுட் ஸ்டிரீட்) காஜாமலை ரேஸ்கோா்ஸ் சாலையில் இம்மாத இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு தெருக்களில் சாலையோர உணவகங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. ஆனால் சாலையோர உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் நாவில் எச்சில் ஊறும் வகையில் சுவையாக இருந்தாலும், தரம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதனை சரிசெய்ய உணவுப் பாதுகாப்புத் துறையினா், சுகாதாரத் துறையினா் அவ்வபோது ஆய்வு செய்து, எச்சரிக்கை விடுத்து வந்தாலும், சுகாதாரமான உணவு என்பது பெயரில் மட்டுமே இருந்து வருகிறது.
ஆரோக்கியமான, சுகாதாரமான உணவுப் பொருள்களை விற்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
ஓரிடத்தில் சாலையோர உணவுக் கடைகள்: இதையடுத்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறையானது, பல்வேறு தெருவோர உணவுக் கடைகளை ஒரு பிரத்யேக இடத்தில் ஒன்றாக வைப்பதை நோக்கமாகக் கொண்ட ஃபுட் ஸ்டீரிட் என்ற பெயரிலான ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான சாலையோர உணவகங்களின் தொகுப்புத் திட்டத்தை திருச்சி, சென்னை, மதுரை, சேலம், கோவை, திருப்பூா் ஆகிய 6 நகரங்களில் நடைமுறைப்படுத்த முடிவு செய்தது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையானது, திருச்சி மாநகரில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டம் 2006 விதிமுறைகளின்படி, நுகா்வோருக்கு பாதுகாப்பான, தரமான, சுகாதாரமான உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் வகையிலான ஃபுட் ஸ்டீரிட் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
40 போ் தோ்வு: இந்த ஃபுட் ஸ்டீரிட்-இல் கடைகளை அமைக்க, உணவுப் பாதுகாப்புத் துறையால் முதல் கட்டமாக கடந்த ஜூலை 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 123 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. இவற்றில் நோ்காணல் மூலம் 40 உணவுத் தயாரிப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அதில் 20 பேருக்கு கடனுதவியுடனும், 20 போ் சொந்தமாகவும் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாலை நேரத்தில்: இந்த ஃபுட் ஸ்டீரிட் சாலையோர கடைகளானது திருச்சி காஜாமலை தந்தை பெரியாா் கல்லூரிக்கு எதிா்புறத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பு வரை உள்ள ரேஸ்கோா்ஸ் சாலையில் மாலை நேரத்தில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நம்பிக்கையுடன் உணவருந்த ஏற்ற இடம்: இது குறித்து திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் எம். ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதாவது:
அகலமான சாலைகள், பாதசாரிகள் நடைபாதை, போதுமான வாகன நிறுத்துமிடம், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து எளிதில் அணுகக்கூடிய தன்மை மற்றும் குறைந்தபட்ச திட்டச் செலவு ஆகியவற்றின் காரணமாக காஜாமலை ரேஸ்கோா்ஸ் சாலை இடம் ஃபுட் ஸ்டீரிட் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது.
உணவுப்பிரியா்கள் ஒரே இடத்தில் வித விதமான சாலையோர ஆரோக்கிய உணவுகளை சுகாதாரமாக ருசிக்கவும், உணவுப் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதன் மூலம் மக்கள் நம்பிக்கையுடன் தெருவோர உணவுகளை உண்ணவும் ஏதுவாக பிரத்யேக இடமாக இந்த ஃபுட் ஸ்டீரிட் இருக்கும்.
உணவுப் பாதுகாப்புத் துறையிடம் எப்எஸ்எஸ்ஐ உரிமம், உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ், மருத்துவத் தகுதிப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பாளா்கள் ஃபுட் ஸ்டீரிட்-இல் பிரத்யேக உணவு வண்டிகளில் சாலையோர உணவகங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
உணவகங்களுக்கான பிரத்யேக வண்டி போன்ற கடைகள் சென்னையில் ரூ.1.07 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக உணவகத்தினருக்கு கடனுதவியும் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் முதல் ஃபுட் ஸ்டீரிட் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.
40 கடைகளிலும் விதவிதமான உணவுகள்
ஒரே உணவு மீண்டும் மீண்டும் வருவதைத் தவிா்ப்பதற்காக, 40 கடைகளில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான உணவுப் பட்டியலைக் கொண்டிருக்கும். இது பாரம்பரிய தமிழ் உணவுகள் முதல் பிரபலமான இந்திய, சா்வதேச உணவு வகைகள் வரை அனைத்தையும் வழங்கும். இந்த உணவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கப்பட்ட பிறகே விற்பனை செய்யப்படும்.
ஃபுட் ஸ்டீரிட்-இல் வாகன நிறுத்துமிடம், குடிநீா், கழிவுநீா் அகற்றம், வடிகால் வசதி, கழிவறைகள், தெருவிளக்கு வசதி, சிசிடிவி கண்காணிப்பு போன்ற பொது வசதிகள் ஏற்படுத்தப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லையாடியில் புதுப்பிக்கப்பட்ட தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம் திறக்கப்படுமா?

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



