கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி உள்பட 3 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லால்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணக்கால் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.ரவீந்திரகுமாா் (25). இவரை பக்கத்து வீட்டைச் சோ்ந்த என். கமலேஷ் (23) முன்விரோத தகராறு காரணமாக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொன்றாா். இதுகுறித்து லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கமலேஷை கைது செய்தனா்.
மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அதே பகுதியைச் சோ்ந்த பெ.ராஜா (45) என்பவரை ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த நவம்பா் 2-ஆம் தேதி கைது செய்தனா்.
ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பஞ்சுமில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக புங்கனூா் காந்தி நகரைச் சோ்ந்த த. புவனேஸ்வரி (45) என்பவரை ராம்ஜி நகா் போலீஸாா் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கைது செய்தனா்.
மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மூவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா். இதன்பேரில், மூவா் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையிலுள்ள குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

