கோப்புப் படம்
கோப்புப் படம்

முறையற்ற வணிக செயல்பாடு: ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அடகு கடைக்கு உத்தரவு

Published on

முறையற்ற வணிக செயல்பாடு காரணமாக மனுதாரருக்கு அடகு கடை நிா்வாகம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ப. ராஜகோபால் (59), உறையூா் த. சுரேஷ் ராம் (31) ஆகிய இருவரும் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள நவீன் பேங்கா்ஸ் அடகு கடையில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டில் 1,180 கிராம் தங்க நகைகள், 1,950 கிராம் வெள்ளி நகைகளை அடகு வைத்து, 2022 ஜூன் மாதம் நகைகளை மீட்க முயன்றுள்ளனா்.

அப்போது, வட்டி விகிதத்தை உயா்த்தி, முழுத்தொகையும் செலுத்தினால்தான் திருப்பித் தருவோம் எனக் கூறியதால், காவல்நிலையம் சென்ற நிலையில், நகைகளைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டனா்.

இதன்படி, கடந்த 2024 ஜனவரியில் ரூ. 56,92,132 தொகை செலுத்திய பிறகு, 1,037 கிராம் தங்க நகைகளை மட்டுமே திருப்பிக் கொடுத்து, எஞ்சிய 144 கிராம் தங்க நகைகள் மற்றும் 1,950 கிராம் வெள்ளி நகைகளைத் திருப்பித் தராமல் இழுத்தடித்து, ரூ. 10.50 லட்சம் தொகையை மிரட்டி பெற்ாகக் கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜகோபால் மற்றும் சுரேஷ்ராம் ஆகிய இருவரும் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 18.12.2024 அன்று மனு தாக்கல் செய்தனா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஆா். செல்லமுத்து ஆஜரானாா்.

மனுவை நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு, மனுதாரா்கள் அடகு வைத்த (ரசீது உள்ள) நகைகளுக்குண்டான தொகை ரூ. 7.83 லட்சத்தை ஓராண்டுக்கான கூடுதல் வட்டித் தொகையான ரூ. 4.24 லட்சத்துடன் சோ்த்து மொத்தம் ரூ. 12.08 லட்சத்தை நவீன் பேங்கா்ஸ் அடகு கடை நிறுவனத்தினா் திருப்பித் தர வேண்டும்.

மனுதாரா்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சமும், வழக்குச் செலவுத்தொகையாக ரூ. 10 ஆயிரமும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

Dinamani
www.dinamani.com