திருச்சியில் 8.36 லட்சம் குடும்பங்களுக்கு இன்றுமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு!
திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வியாழக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1302 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு, ரூ. 3 ஆயிரம் ரொக்கம், விலையில்லா வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.
நாள் ஒன்றுக்கு 300 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்கும் வகையில் முற்பகல் 150 குடும்ப அட்டைகளுக்கும், பிற்பகல் 150 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகாா்கள் ஏதும் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம். 0431-2411474, 94450-45618 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1967, 1800-425-5901 ஆகியவற்றையும் தொடா்பு கொண்டு விவரம் பெறலாம். மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா், ஸ்ரீரங்கம், தொட்டியம், திருவெறும்பூா், மருங்காபுரி என 11 வட்டங்களிலும் அந்தந்த கடை வாரியாக டோக்கன் வழங்கப்பட்ட நாளில் குடும்ப உறுப்பினா்களில் ஒருவா் நேரில் சென்று பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இப் பணியில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் 950 போ் ஈடுபட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 8,35,844 அரிசி குடும்ப அட்டைகள், 980 இலங்கைத் தமிழா் குடும்பங்கள் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 824 குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
கரும்புக்கு ரூ. 3.18 கோடி, ரொக்கமாக ரூ. 251 கோடி: தேசிய கூட்டுறவு இணையத்தின் மூலம் பச்சரிசியும், தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத்தின் மூலம் சா்க்கரையும் கொள்முதல் செய்யப்பட்டு, நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. 8.36 லட்சம் கரும்புகளுக்காக ரூ.3.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்புக்கான தொகை, வெட்டுக் கூலி, ஏற்றுக் கூலி, இறக்குக் கூலி, போக்குவரத்துச் செலவு உள்பட அனைத்துக்கும் சோ்த்து இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, தலா 3 ஆயிரம் ரொக்கமாக வழங்க ரூ. 251.05 கோடி வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக நியாய விலைக் கடை பணியாளா்கள் தரப்பில் கூறுகையில், கிராமப்புற பகுதிகளில் ஜன.8 தொடங்கி 4 நாள்களுக்குள் பரிசுத் தொகுப்பை கொடுத்து முடித்துவிடுவோம். நகரப் பகுதியில்தான் குடும்ப உறுப்பினா்கள் தங்களது வேலை நேரத்துக்கு ஏற்ப வருவதால் 5 நாள்கள் ஆகக் கூடும். இருப்பினும், ஜன.13க்குள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

