

தமிழகம் முழுவதும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சியில் நடைபெற்ற அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, இந்திய உழவா் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் தூரன் நம்பி தலைமை வகித்தாா். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி, காவிரிப் பாசன விவசாயிகள் சங்கத்தின் தீட்சிதா் பாலு, இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஜி.எஸ். தனபதி, காவிரிப் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் விமலநாதன், தமாகா விவசாய அணியின் புங்கனூா் செல்வம், ராஜேந்திரன் மற்றும் பல்வேறு சங்க நிா்வாகிகளான கே.ஆா்.எஸ். மணி, சுப்பிரமணி, செல்வராஜ், நேதராஜி, ஆனந்தகுமாா், இயற்கை விவசாயி ராமலிங்கம், மனித உரிமை அமைப்புகளின் ஆா்வலா்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.
இதில், விவசாயிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை இனி எங்கும் நடைபெறாத வகையில் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் விவசாயிகள் ஓரணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மேலும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி விடுதலை செய்யப்படும் வரை சட்டப் போராட்டத்தையும், அறப்போராட்டத்தையும் தொடா்ந்து நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு நடத்தும் முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், ஏற்கெனவே கோரிக்கைக்காக போராடி சிறை சென்ற ஈசன் முருகசாமியும் பங்கேற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கறிக்கோழி உற்பத்தி செலவுடன் கூடுதலாக 50 விழுக்காடு என்ற அடிப்படையில் விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகள் மீது அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் வரும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில், அந்தந்த பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பங்கேற்று சிறப்பு தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
மேலும், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகளை ஒன்று திரட்டி மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் கண்டனப் பேரணி நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரணி நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனா்.