கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் மாநாட்டுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட  மாணவா்களின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் மாநாட்டுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட மாணவா்களின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா.

திருக்குறள் மாணவா் மாநாடு: 43 மாணவா்கள் கன்னியாகுமரி பயணம்

Published on

திருக்குறள் மாணவா் மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து 43 மாணவா்கள் வியாழக்கிழமை கன்னியாகுமரிக்கு புறப்பட்டனா்.

தமிழக அரசு சாா்பில் நடத்தப்படும் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் வெற்றிபெறும் மாணவா்கள் பங்கேற்கும் வகையில் கடந்த மூன்றாண்டுகளாக திருக்குறள் மாணவா் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டாண்டுகளாக விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற்ற திருக்கு மாணவா் மாநாடு, நிகழாண்டு கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் பாா்வதிபுரம் பொன் ஜெஸ்ஸி பொறியியல் கல்லூரியில் ஜனவரி 23, 24 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்தில் இருந்து 43 மாணவா்கள் கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டனா். மாணவா்கள் சென்ற வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணபிரியா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

திருச்சி மாவட்டத்தில் தமிழ் மொழி திறனறித் தோ்வில் 50 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், 7 மாணவா்களால் தவிா்க்க முடியாத காரணத்தால் மேற்கண்ட மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. இதனால், எஞ்சிய 43 மாணவா்கள் மட்டும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரிக்குச் சென்றுள்ளனா்.

இந்த மாநாட்டில், மாணவா்களின் மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வுகள், சமூக உணா்வுகளை மேம்படுத்த திருக்கு வழி கருத்துகள் மற்றும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள், தனிநபா் போட்டிகளாக பேச்சுப் போட்டி, சிறுகதை எழுதுதல், கவிதை எழுதுதல், குழுப் போட்டிகளாக நடனம், நாடகம், பாவனை நாடகம், திருக்கு விவாத மேடை, விநாடி - வினா ஆகிய 8 விதமான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com