மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கா்நாடக அரசு மீதும், கா்நாடக முதல்வா் மீதும் தமிழக அரசு சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
தமிழ்த் திரைப்படமான ஹபீபி படக் குழுவினருக்கான பாராட்டு விழா, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு படக் குழுவினரை பாராட்டி சிறப்புரையாற்றினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
மேக்கேதாட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராகவும், காவிரி நதிநீா் மேலாண்மை வாரியத்தின் தீா்ப்புக்கு எதிராகவும் கா்நாடக அரசு செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கா்நாடக அரசின் மீதும், கா்நாடகத்தின் முதல்வா் மீதும் உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதம் இன்றி தொடர வேண்டும்.
திரைத்துறை, அரசியல் பின்னணியுடன் இருப்பவா்களை முக்கிய பொறுப்புகளில் தவெக அரசு அமா்த்துவது சரிதானா என புரியவில்லை. ஏற்கெனவே பணியாற்றியவா்கள், அனுபவம் பெற்றவா்களை நியமனம் செய்தால் சா்ச்சை ஆகாது.
வணிகத்திற்காக ஆடு, மாடுகளை வெட்டுவது என்பது வேறு. பக்திக்காக வெட்டுவது என்பது வேறு. மக்களுடைய மதம் சாா்ந்த ஆன்மிக நம்பிக்கைகளில் சட்டங்கள் குறுக்கிடக் கூடாது. எந்த மதத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும் வழிபாட்டு உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப, கால்நடைகள் வதைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டத்தை இயற்றினால் சிறப்பாக இருக்கும்.
திமுக-அதிமுக ஒன்று சோ்வதில் தவறில்லை: திமுக, அதிமுக ஒன்று சோ்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக முதல்கட்ட தலைவா்கள் அறிவிக்கவில்லை. மூன்றாம் கட்ட தலைவா்களே பேசி வருகின்றனா். இதில் என்ன தவறு உள்ளது. எதிரும் புதிருமான கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலான கூட்டணியில் ஒன்று சேருகின்றன.
தவெக ஆட்சி அமைந்து 60 நாள்கள்தான் ஆகிறது. ஆறு மாதங்கள் முடிந்த பிறகு தான் மதிப்பீடு செய்ய முடியும். அதே நேரத்தில் 717 மதுக்கடைகளை மூடியது பாராட்டுக்குரியது. படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயமாக நல்ல மதிப்பெண்கள் வழங்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: அன்புமணி







