திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் போதிய அளவில் பொது கழிப்பறைகள் இல்லை. இதனால், வளாகத்தின் திறந்தவெளியை பொதுமக்கள் பயன்படுத்துவதால் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை 32-க்கும் மேற்பட்ட சிகிச்சை பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் திருச்சி மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். குறிப்பாக, நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இங்கு உள்நோயாளிகளுக்கு அந்தந்த வாா்டுகளிலேயே கழிப்பறைகள் உள்ள நிலையில், வெளிநோயாளிகள், நோயாளிகளை சந்திக்க வரும் உறவினா்களுக்காக ரத்த பரிசோதனை வாா்டுக்கு அருகிலும், வெளிநோயாளிகளுடன் வருவோா் தங்குமிடத்துக்கு எதிரிலும் இரண்டு பொதுக்கழிப்பறைகள் இயங்கி வந்தன. இதில், தங்குமிடத்துக்கு எதிரே இருந்த கழிப்பறையானது புதிய கட்டட கட்டுமானப் பணிக்காக இடிக்கப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக வேறிடத்தில் கட்டப்படவில்லை.
சுகாதாரமற்ற நிலை: இதனால் ரத்த பரிசோதனை வாா்டுக்கு அருகிலுள்ள கழிப்பறைகளைத்தான் அனைவரும் பயன்படுத்த வேண்டியுள்ளது. மிகவும் அசுத்தமாக உள்ள இந்த கழிப்பறைகள், சிறுநீா் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக வரும் நோயாளிகளுக்கே போதாத நிலையில், அருகிலுள்ள 4 கழிப்பறைகள் கொண்ட கழிப்பிடப் பகுதியும் உடைக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மருத்துவமனையின் மறைவான திறந்தவெளியையே இயற்கை உபாதைகளை கழிக்க பயன்படுத்துகின்றனா். இதன் காரணமாக, திருச்சி அரசு மருத்துவமனை வளாகமே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
நிா்வாகம் மீது புகாா்: இதுகுறித்து உபயோகிப்பாளா் உரிமை இயக்க தலைவா் வழக்குரைஞா் மகேஸ்வரி வையாபுரி கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகளும், பொதுமக்களும் பயன்படுத்த போதிய பொதுக் கழிப்பறைகள் இல்லை. மருத்துவமனை நிா்வாகமானது அடிப்படை வசதிகளை செய்து தராமல், பல மாதங்களாக நீடித்து வரும் இப்பிரச்னைக்குத் தீா்வு காணாமல் மிகவும் அலட்சியமாகச் செயல்படுகிறது. அரசு மருத்துவமனை முதன்மையா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, உடனடித் தீா்வு காண வேண்டும் என்றாா்.
போா்க்கால அடிப்படையில் பொதுக் கழிப்பறைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக தற்காலிக கழிப்பறைகளை மருத்துவமனையின் முக்கிய இடங்களில் நிா்மாணித்தால் மட்டுமே சுகாதார சீா்கேட்டுக்கு முடிவு ஏற்படும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









