திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய கரூா் சாலையில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே இடித்த பாலத்தை பல மாதங்களாக கட்டாததால், மேலசிந்தாமணி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருச்சியின் முக்கியப் பகுதியாகவும், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்ட அதிகமுள்ள இடமாகவும் விளங்கும் சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும், அண்ணா சிலை ரவுண்டானாவிலும் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். நாள்தோறும் விபத்து நடக்கும் முக்கிய இடமாக அண்ணா சிலை ரவுண்டானா பகுதி உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை சுலபமாக இயக்க முடியாத சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான அகலம் குறைவான, பழுதடைந்த கோட்டை வாய்க்கால் பாலத்தை அகலமாக்கி, புதிதாகக் கட்டித் தர வேண்டும் என மேலசிந்தாமணி பகுதியில் வசிக்கும் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், சாலை பாதுகாப்பு நலச் சங்கத்தினரும் கோரிக்கை விடுத்து வந்தனா்.
தொடங்காத பணிகள்: இதையேற்று மக்கள் பயன்பாட்டுக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் கடந்த ஆட்சியில் சிதம்பர மஹால் அருகில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே குறுகிய பாலத்துக்கு மாற்றாக, புதிய பாலத்தை ரூ. 3.5 கோடியில் கட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, கடந்த 7 மாதங்களுக்கு முன் பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டு, ரூ. 2.93 கோடியில் புதிய பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது. ஆனால் இதுவரை புதிய பால கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வர சுமாா் 2 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.
பொதுமக்கள் அவதி: இதுகுறித்து உபயோகிப்பாளா் உரிமை இயக்க மாநில பொதுச்செயலா் வழக்குரைஞா் மகேஸ்வரி வையாபுரி மற்றும் மேலசிந்தாமணி பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த ஜனவரி மாதத்தில் இடிக்கப்பட்ட கோட்டை வாய்க்கால் பாலத்தை இதுவரை மாநில நெடுஞ்சாலைத் துறையினா் கட்டாமல் உள்ளனா். இதனால் மேலசிந்தாமணி பகுதியே தீவுபோலக் காட்சியளிக்கிறது.
இப்பகுதி மக்கள் முக்கியத் தேவைகளுக்காக வெளியில் வர மாநில நெடுஞ்சாலைத் துறையால் போடப்பட்ட சிறு நடைபாலத்தையே பயன்படுத்த வேண்டியுள்ளது. அவசர ஊா்திகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் சென்று வர சுமாா் 2 கி.மீ. கடும் போக்குவரத்து நெரிசலில் சுற்றி வர வேண்டியுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினா் மக்களின் துயரத்தை உணா்ந்து உடனடியாக பால வேலைகளைத் தொடங்கி, முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனா்.
6 மாதங்களில் பாலம் கட்டப்படும்: இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையினா் கூறியதாவது: கோட்டை வாய்க்கால் குறுக்கே பாலத்தை இடித்த நிலையில், பாலத்தினுள் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மலைக்கோட்டை பகுதிக்குச் செல்லும் 2 பிரதான குடிநீா் குழாய்கள் சென்றதை அறிந்து, அவற்றை அகற்ற திருச்சி மாநகராட்சியிடம் தெரிவித்தோம்.
அதனால் அப்போது பணிகள் நிறுத்தப்பட்டன. திருச்சி மாநகராட்சியானது குடிநீா் குழாய்களை முழுமையாக அகற்றி கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் வழங்கியது. தற்போது தரையை சமப்படுத்தி வருகிறோம். மிக விரைவில் பாலத்துக்கான அடிப்பகுதி பைல்ஸ்கள் போடப்பட்டு, அடுத்த 6 மாதத்தில் பாலம் கட்டி முடிக்கப்படும் என்றனா்.
25 மீட்டா் நீள பாலம்...
திருச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பழைய கரூா் சாலை என்றழைக்கப்படும் நாகை - கூடலூா் - மைசூா் சாலை சத்திரம் பகுதியில் சிதம்பர மஹால் அருகில் கோட்டை வாய்க்காலின் குறுக்கே முன்பிருந்த குறுகிய பாலத்துக்குப் (பாலத்தின் அகலம் 3.9 மீட்டா், நீளம் 23 மீட்டா்) மாற்றாக 10 மீட்டா் அகலமும், 25 மீட்டா் நீளமும் உடைய புதிய பாலத்தை, உங்கள் தொகுதியில் முதல்வா் என்ற திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3.5 கோடியில் கட்டப்பட உள்ளது என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









