திருச்சியில் முதல்வா் ஜோசப் விஜய் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டிருந்த போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
திருச்சியில் தவெக சாா்பில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்பதற்காக முதல்வா் ஜோசப் விஜய் பிற்பகல் 2.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து சத்திரம் வரை 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனத்தில் சாலைப் பேரணியாக வந்தாா்.
முதல்வா் வருகையையொட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சத்திரம் வர வேண்டிய பேருந்துகள் மாம்பழச்சாலை, மெயின்காடுகேட், கேடி சந்திப்பு பகுதிகளில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி, இறக்கி விடப்பட்டனா். மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் காலை 10 மணி முதலே போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், மாம்பழச்சாலையில் இருந்து மெயின்காடு கேட்டுக்கும், கேடி சந்திப்புக்கும், மெயின்காடு கேட்டில் இருந்து மாம்பழச்சாலை, கேடி சந்திப்புக்கும், கேடி சந்திப்பில் இருந்து மாம்பழச்சாலை, மெயின்காடு கேட்டுக்கும் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேல் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
இதேபோல, கடலூா், அரியலூா், பெரம்பலூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வரவேண்டிய பேருந்துகளும் கொள்ளிடச் சாலை வழியாக மத்தியப் பேருந்து நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. மாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் இருந்ததால் வெளியூரில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளும், உள்ளூா் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினா்.
போக்குவரத்து நெரிசல்:
முதல்வா் வருகையையொட்டி பல்வேறு பகுதிகளில் தடுப்பு வைக்கப்பட்டதால் சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ளப் பகுதிகள், திருச்சி - சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக முதல்வா் திரும்பிச் சென்றபோது சாலையின் இரண்டு பகுதிகளிலும் தொண்டா்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினா்:
முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே அவா்களுக்கு க்யூஆா் கோடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, அந்த சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அனுமதி சீட்டு வைத்திருந்த சிலரை போலீஸாா் அனுமதிக்காததால் அதைக் கண்டித்து தனியாா் கல்லூரி முன்பு தவெகவினா் சிலா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பின்னா், அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

தமிழகத்தின் உரிமைகளை விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் சி. ஜோசப் விஜய் உறுதி!

முதல்வா் ஜோசப் விஜய் இன்று திருச்சி வருகை

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



